2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

உயிரினங்களை வேதனைப்படுத்தாதீர்கள்

Editorial   / 2022 ஜனவரி 24 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காடுகளுக்குத் தீவைத்து, உயிரினங்களை வேதனைப்படுத்தாதீர்கள்

ஒவ்வோர் உயிரினமும் வாழவேண்டும். அதற்கான சூழலை, அவையவை தேடிக்கொள்கின்றன. அவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழப் பழகிக்கொண்டால், உயிரினங்கள் வேண்டுமென்றே தாக்குவதிலிருந்து ஒவ்வொருவரும் தப்பித்துக்கொள்ளமுடியும்.

நாடளாவிய ரீதியில் தற்போது வரட்சியான வானிலை நிலவுகின்றது. வெளியில் தலைகாட்ட முடியாதளவுக்கு சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. நீரேந்தும் பிரதேசங்களின் நீர்நிலைகள் வரண்டுவிட்டன. நீர்த்தேக்கங்களின் மட்டம் கிடுகிடுவென குறைந்துவிட்டது.

அதனை அண்டிய பகுதிகளில் மட்டுமன்றி, பரவலாக காடுகளும் பற்றைக்காடுகளும் காய்ந்துவிட்டன. இலையுதிர் காலம் போல, பெரும்பாலான மரங்கள், இலைகளின்றிக் காய்ந்து போய் நிற்கின்றன.

இதற்கிடையில், பற்றைக் காடுகளுக்கும் காடுகளுக்கும் தீ வைத்தல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. அதில் வாழும் சின்னஞ்சிறிய உயிரனங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதேநிலைமை தொடருமாயின், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் ஐயமே இல்லை.

அதுமட்டுமன்றி, அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலைமையொன்று ஏற்படும். தற்போது அமல்படுத்தப்படும் மின்வெட்டின் நேரம், நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் ஏற்பட்டுள்ளன. ஆகையால், இயற்கையை சீண்டிப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

ஒவ்வொரு தப்பான செயலையும் தண்டிக்கும் வகையில், சட்டங்கள் உள்ளன. பலருக்கும் அதுதொடர்பில் போதுமான தெளிவு இருக்காது. காடுகள் அல்லது பற்றைக்காடுகளுக்குத் தீ வைப்பதன் ஊடாக மரங்கள், இலை, செடி கொடிகள் மட்டுமன்றி, சின்னஞ்சிறிய உயிரினங்களும் அவற்றின் வாழிடங்களும் அழிக்கப்படுகின்றன.

அந்த உயிரினங்களின் முட்டைகள் கருக்கப்படுகின்றன. இது பாரிய குற்றங்களின் ஒன்றாகும்.

ஆகையால், காடுகள் மற்றும் வனஜீவராசிகள் பேணலுக்கான சட்டம் தொடர்பில் ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். அதில் தெளிவு ஏற்படுமாயின், காடுகளுக்கு தீவைத்தல் முற்றுமுழுதாக நிறுத்தப்படும்.

சுற்றாடலைப் பல்வேறு நிறுவனங்கள் பேணுகின்றன. வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, அரச மரக்கூட்டுத்தாபனம் இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆகையால், அந்தந்த நிறுவனங்கள், காடழிப்பதால் ஏற்படும் தீமைகள், நீதிமன்றங்களின் ஊடாக வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்டவை தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும்.

இயற்கையின் மீது அன்பு செலுத்துமாறு சொல்லிக்கொடுக்கவேண்டும். மரம் நடுகையை ஊக்கப்படுத்தவேண்டும். வீட்டுக்கொரு மரம் என்னும் திட்டத்தை இன்னும் பரந்தளவில் முன்கொண்டு செல்லவேண்டும். அதனூடாகவே இயற்கையின் சமநிலையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இயற்கையின் சமநிலை குழம்பிவிட்டால், பல்வேறான மாற்றங்கள் ஏற்படும். இது சகல உயிரினங்களின் வாழ்க்கை சக்கரத்தைப் புரட்டிப்போட்டுவிடும். ஆகையால், காடுகள், பற்றைக் காடுகளுக்கு தீ வைப்பதை நிறுத்தி, இயற்கையை பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் அர்ப்பணிக்க வேண்டும். அந்தப் பயணத்தை நாளைக்குத் தள்ளிப்போடாமல், இன்றிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். (24.01.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .