2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நான்காவது தூணை நசுக்க முனைந்த ‘வெள்ளைப்பூண்டு’

Editorial   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்காவது தூணை நசுக்க முனைந்த ‘வெள்ளைப்பூண்டு’

கூட்டுப்பொறுப்பின் கீழிருந்துதான்   தீர்மானங்கள் எடுக்கப்படுகிறதா? அவ்வாறான முடிவுகள்தான் அமல்படுத்தப்படுகின்றனவா? என மூக்கின் ​மேல் விரலைவைத்துக் கேட்குமளவுக்கு அவ்வப்போது, சர்ச்சைக்குரிய முடிவுகளையே இவ்வரசாங்கம் எடுக்கிறது. அவற்றைத் தவிர்க்க, இறுதியில் ஜனாதிபதி அல்லது பிரதமர் தலையீடு செய்யவேண்டியும் ஏற்படுகின்றது. 

ஜனநாயக ஆட்சிக்கு சட்டவாக்கம், நீதித்துறை, நிர்வாகம், ஊடகம் ஆகிய நான்கு தூண்களும் மிகமுக்கியமானவை. இந்த நான்கு தூண்களின் ஒன்றேனும் ஆட்டம் காணுமாயின், அந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது என்பது மட்டுமே உண்மையாகும்.

சில நாடுகளில், இந்த நான்கு தூண்களும் துருப்பிடித்திருக்கும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், கடந்தகால ஆட்சிகளின்போது, ஏதாவது தூண்கள் ஆட்டங்காணவோ, துருப்பிடிக்கவோ செய்யப்பட்டதை அவதானிக்கமுடிந்தது. சட்டவாக்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான பனிப்போரை, நீதித்துறையே தீர்த்துவைத்தது. அதில், ஊடகத்தின் வகிபாகம் முக்கியமானதாக இருந்தது.

சில ஆட்சியாளர்கள், தமது ஆட்சியைப் போற்றிப்புகழ வேண்டுமென விரும்புவார்கள். இன்னும் சிலர், ஊடங்களின் கைகளை முழுமையாக அவிழ்த்துவிட்டு விடுவர். ஊடக சுதந்திரத்தைப் பலரும் அப்பட்டமாக மீறிச் செயற்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக, சமூக ஊடங்கள், பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளின்றி செயற்பட்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது. அதனால்தான், சமூக ஊடகங்கள் மீதான, ஒழுக்கநெறி தொடர்பில் கதையடிபடுகின்றது.

அவ்வப்போது சிற்சில சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இந்த அரசாங்கம், ‘வௌ்ளைப்பூண்டு’ விவகாரத்தால், ஊடகங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பைக் கேட்டிருக்கிறது. ஏதோவொன்று நடந்திருக்காமல், ஊடகங்களில் செய்திகள் வெளியாகாது. அவ்வாறுதான், வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில், வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஊடகவியலாளர்களை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

இலங்கையில், தகவல் அறியும் உரிமை தினம்  அனுஷ்டிக்கப்பட்ட செப்டெம்பர் 28ஆம் திகதியன்றே ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், பிரதமரின் ​தலை​யீட்டால், ஊடகவியலாளர்கள் சி.ஐ.டிக்குச் செல்வது, அன்றேல் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவிருந்தமை தடுக்கப்பட்டது.

இவ்வரசாங்கம் எடுக்கும்  தீர்மானங்கள் பல மாற்றப்படுகின்றன; அன்றேல், வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. வர்த்தமானி அறிவித்தல்கள் பல மீளவும் திருத்தப்படுகின்றன. இங்குதான் கூட்டுப்பொறுப்பு இல்லையென்பது வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகின்றது.

அரசாங்கத்துக்கு துதிபாடும், காவடியெடுக்கும் ஊடங்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. துதிபாடும் அளவுக்கு இல்லையெனினும், ஊழல், மோசடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டவே வேண்டும். கடந்தகால அரசாங்கங்களால் புரியப்பட்ட ஊழல்மோசடிகளை பல ஊடகங்கள் அம்பலப்படுத்தியமை தெரிந்ததே.

அதே​போலதான், ‘வெள்ளைப்பூண்டு’ மோசடியும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதில், முறையான விசாரணைகளை முன்னெடுத்து. உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனைவிடுத்து, நான்காவது தூணை ஆட்டமுயன்றால், அது ஜனநாயகத்தையே கேள்விக்கு உட்படுத்திவிடும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .