2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மண்பானையை உடைத்த மாதனமுத்தாவும் ஊசி குத்தும் அரசாங்கமும்

Editorial   / 2021 ஜூன் 06 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீராத பிரச்சினைகளையெல்லாம் தனது புத்திசாதுரியத்தால் தீர்த்துவைக்கும் சிறந்த அறிஞராக ஊருக்குள் மதிக்கப்படுபவர் மாதனமுத்தா, ஒருநாள், கிராமத்து வீடொன்றில், மாட்டுக் கன்று, மண்பானைக்குள் தலையைவிட்டு, மாட்டிக்கொண்டது. 

முயற்சிகள் செய்தும், கன்றிலிருந்து பானையை அகற்ற முடியவில்லை. பிரச்சினையைத் தீர்த்துவைக்க, மாதனமுத்தா அழைக்கப்பட்டார். அவரது, ஆலோசனைப்படி, கன்றின் கழுத்தோடு வெட்டப்பட்டது. இப்போது, பானைக்குள் இருக்கும் கன்றின் தலையை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பானையை உடைத்துவிட மாதனமுத்தா,  ஆணையிட்டார். பானை உடைத்து, கன்றினது தலை மீட்கப்பட்டது. ஊர்மக்கள் கரவொலி எழுப்பி, மாதனமுத்தாவின் அறிவாற்றலைப் பாராட்டி, வியந்தனர். 

மாதனமுத்தாவின் இத்தகைய முடிவுகளைப் போலவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தில் உள்ள அதிகார மட்டங்களால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 

குறிப்பாக, தடுப்பூசிக் செலுத்தும் நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள், அரசாங்கத்தின் அக்கொள்கைக்கு மாறாக, புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து, மருத்துவப் பணியாளர் சங்கங்கள், கிராமசேவை உத்தியோகத்தர் சங்கம் ஆகியவை, தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோன வைரஸ் பாதிப்பில் நான்காம் நிலை என்ற ஆபத்துக் கட்டத்தில் இருக்கும் நிலைவரத்தில், இத்தகைய பணிப்பகிஷ்கரிப்புகள், நாட்டைப் பேராபத்துக்குள் சிக்கவைத்துவிடும். 

பொதுமக்ககளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோரில் அநேகர், இன்னமும் முதலாவது டோஸைக் கூட எடுக்கவில்லை. ஆனால், அரசியல், அதிகார செல்வாக்கு மிக்கவர்கள் பலர், இரண்டாது டோஸையும் எடுத்துவிட்டனர் என, சம்பந்தப்பட்ட தரப்புகளால் குற்றம்சாட்டப்படுகின்றது. 

இதற்குக் காரணம், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்குள் ‘அரசியல்’ தலையை நுழைத்தமை ஆகும். 

தற்போது தடுப்பூசி விவகாரங்களைக் கையாள்வதற்காக, வைத்திய நிபுணர் ஒருவர் பகுதி நேரமாகவே நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டைப் பேராபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக அல்லும்பகலும் உழைக்க வேண்டிய ஒரு பொறுப்பு மிக்க பதவிக்கான நியமனம், பகுதிநேர நியமனமாக அமைந்திருக்கும் அளவுக்கு, தடுப்பூசி விவகாரத்தில், அரசியல் தலையீடு ஆழவேரோடி உள்ளது. 

எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து, மக்களும் அதிருப்பதிகளையும்  வெறுப்பையும் வெளிப்படுத்தியே வருகின்றனர். ஏனென்றால், தடுப்பூசி விவகாரத்தில், பொதுமக்கள் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் ஏமாற்றப்படுள்ளனர். அரசாங்கத்துடன் அதிகாரத்தில் உள்ளவர்களும் அவர்களின் உறவினர்களும் ஆதரவாளர்களுமே தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டிருக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மாதனமுத்தாவின் முடிவுகளையே எடுக்கும் இந்தக் கீழ்நிலையிலிருந்து விடுபட்டு, அரசியல் தலையீடுகள் இன்றி, வெற்றிகரமாகப் பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிஎன்ன என்பதே, இன்று இனம், மதம், பேதங்களின்றி, இலங்கை மக்கள் முன்னெழுந்துள்ள கேள்வியாகும். இதையே நாங்களும் பிரதிபலிக்கின்றோம். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .