2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தாவூத் இப்ராகிம் குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பும்

Freelancer   / 2022 ஜூலை 04 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராச்சியைச் சேர்ந்த பாதாள உலக பிரபலம் தாவூத் இப்ராகிம் குறித்து, சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட அமுலாக்க விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் டொட் டி ரொபின்சன்,  தனது 4 நாட்கள் பாகிஸ்தான் விஜயத்தின் போது கலந்துரையாடவுள்ளார்.

கராச்சியை தளமாகக் கொண்ட தாவூத் இப்ராஹிமின் நாடு கடந்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பின் பிரச்சினையை ரொபின்சன் எடுத்துக்கொள்வாரா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பிரச்சினை குறித்த கேள்விகள் பாகிஸ்தானிடம் எழுப்படும் என தெரிவித்ததாக குளோபல் ஸ்ட்ராட் வியூ செய்தி வெளியிட்டுள்ளது.

தாவூத் இப்ராஹிமைத் தவிர, போதைப்பொருள் எதிர்ப்பு, பாலினப் பிரச்சினைகள், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மற்றும் அமெரிக்க-பாகிஸ்தான் ஒத்துழைப்பு குறித்தும் உதவி செயலாளர் கலந்துரையாடவுள்ளார்.

அமெரிக்க திறைசேரியின் நிறைவேற்று ஆணை 13224 இன் கீழ் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம், இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பாரிய அளவிலான போதைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும், இந்திய அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்வதிலும் ஈடுபட்டுள்ளார் என குளோபல் ஸ்ட்ராட் அறிக்கையிட்டுள்ளது.

அவரது நாடுகடந்த குற்ற கூட்டமைப்பு, டி நிறுவனம், முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்படுகிறது. 

டி நிறுவனம் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கடத்தல், ஒப்பந்த கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் 257 பேர் உயிரிழந்த பயங்கரவாத குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தாவூத் இப்ராகிம் மற்றும் டி நிறுவனத்தின் ஏனைய தலைவர்கள், சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2003 ஒக்டோபரில், அமெரிக்க திறைசேரித் துறை தாவூத் இப்ராஹிமை உலகளாவிய பயங்கரவாதி என்று குறிப்பிட்டது. 2006 ஜூனில், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குற்ற கூட்டமைப்பான டி நிறுவனத்தை கிங்பின் சட்டத்தின்படி வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று அமெரிக்கா பெயரிட்டது.

டி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான சோட்டா ஷகீல் மற்றும் இப்ராஹிம் டைகர் மேமன் ஆகியோரை அமெரிக்க திறைசேரி, கிங்பின் சட்டத்தின் கீழ் 2012 மே மாதம் பெயரிட்டது.

இந்த வருடம் மே மாதம், தேசிய புலனாய்வு அமைப்பு, டி நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத நிதியுதவியில் மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் ஈடுபட்ட சோட்டா ஷகீலின் உதவியாளர்களான ஆரிப் அபுபக்கர் ஷேக் (59) மற்றும் ஷபீர் அபுபக்கர் ஷேக் (51) ஆகியோரை கைது செய்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .