2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம்  சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது.

இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும். இந்நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் அதிக அளவு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குரங்குகளிடம் இருந்து நோய் பரவுகிறது என்கிற தவறான எண்ணத்தில் பிரேசில் மக்கள் குரங்குகளை கொலை செய்து வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ரியோ டீ ஜெனிரோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதே போன்ற சம்பவங்கள் நாட்டின் பிற நகரங்களிலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் கொல்லப்படுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம்  மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.

 உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் இதுப்பற்றி கூறுகையில் "இப்போது நாம் பார்க்கும் நோய் பரவல் மனிதர்களிடையே உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே மக்கள் நிச்சயமாக விலங்குகளைத் தாக்கக்கூடாது" எனக் கூறினார்.

பிரேசிலில் இதுவரை 1,700 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதும், அங்கு இந்த நோய்க்கு ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .