
கராத்தே ஒரு தற்காப்புக்கலை மாத்திரம் அல்ல உடல் உறுதி, மன உறுதி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, தன்னடக்கம் போன்ற விடயங்களை எமக்குள் வளர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த கலையாகும். கராத்தே கலையை வகுப்பில் கற்பதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாது தினமும் குறுகிய நேரம் என்றாலும் பயிற்சிசெய்தல் மிக முக்கியமானதாகும் என தேவசகாயம் அன்ரோ டினேஸ் குறிப்பிட்டார்.
அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய திறந்த கராத்தே போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற, இலங்கை சோட்டோகான் கராத்தே அக்கடமியின் இன்டநெசனலின் பிரதம ஆசிரியரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசனின் இலங்கைக்கான பிரதிநிதியுமாகிய தேவசகாயம் அன்ரோ டினேஸ் - தமிழ்மிரர் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி.
கேள்வி - கராத்தே துறையில் நீங்கள் எவ்வாறு உள்நுழைந்தீர்கள்?
பதில் - சிறு வயது முதலே ஆக்ஸன் திரைபடங்களை பார்க்கும்போதே இதனை கற்கவேண்டுமென்று ஆசைவந்தது. எனது 13ஆவது வயதில் யாழ். நகரில் கராத்தே ஆசிரியர் மோகன் வின்சன், ஆசிரியர் றேமன் கபிரியேல் ஆகியோரிடம் கலையை கற்க ஆரம்பித்தேன்.
கற்க ஆரம்பித்த காலம் முதலே கராத்தே தேர்வுகளில் கிடைத்த சிறப்புத் தேர்ச்சி மற்றும் யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டிகளில் கிடைத்த பெறுபேறுகள், கராத்தே கண்காட்சிகளில் சிறப்பாக பங்கெடுத்து பாராட்டுகளை பெற்றமை என்பன எனது ஆர்வத்தை மேலும் தூண்டியது.
பாடசாலையில் கற்கும் காலத்தில் வீட்டில் உணவுக்காக தரும் பணத்தினை கராத்தே வகுப்பின் மாதாந்தக் கட்டணம் மற்றும் செலவீனங்களை செய்தமையை இன்றுவரை என்னால் மறக்க முடியாது.
கேள்வி - கராத்தா ஆசிரியரான நீங்கள், கற்பிற்க வேண்டும் என்ற ஆர்வம் எவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டது..?
பதில் - கராத்தேயில் குறிப்பிட்ட தரத்தினை அடைந்ததுமே எனக்கு இதனை கற்பிக்கவேண்டுமென்ற ஆர்வம் வந்தது. வகுப்பில் மாத்திரமல்ல, வீட்டில் இடைவிடாது பயிற்சிசெய்வதும், கலை தொடர்பாக ஆராய்வதும் எனது பிரதான பொழுதுபோக்காக இருந்து வருகின்றது. 1996ஆம் ஆண்டு எனது நண்பர்களுக்கு முதன் முதலில் கராத்தேயை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தது முதல் மாணவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது.
2001ஆம் ஆண்டு யாழ். மாவட்ட விளையாட்டுதுறை செயலகத்தினால் யாழ். மாவட்ட கராத்தே சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டபோது அந்தச் சங்கத்தின் செயலாளராக நான் தெரிவு செய்யப்பட்டமை என் வாழ்வில் கராத்தே என்னை அடுத்தபடிக்கும் கொண்டு சென்றது.
கேள்வி - கராத்தேயில் உங்களை இந்தளவுக்கு உயர்த்தியதுக்கு சந்தர்ப்பங்களாக அமைந்த விடயங்கள்..?
பதில் - 2002ஆம் ஆண்டில் இலங்கை கராத்தே தந்தை என அழைக்கப்பட்ட கராத்தே பேராசான் சிகான் பொணி ரொபட்ஸ்ஸின் கழகத்தில் இணைந்து கராத்தே தொடர்பான மேலதிக நுட்பங்களை விரிவாக கற்றேன்.
2005ஆம் ஆண்டில் சிகான் பொணி ரொபட்ஸ்ஸினால் 4ஆம் கறுப்புப் பட்டிக்கு தரம் உயர்த்தப்பட்டேன்.
2007இல் சிகான் பொணி ரொபட்ஸ்ஸின் மறைவின் பின்னர் ஜப்பானிய கராத்தே நிபுணரான சிகான் ரி.சுசுக்கியினால் நேரடியாக நடத்தப்பட்ட கராத்தே உயர் தேர்வில் தேர்ச்சியடைந்து, சர்வதேச ஜப்பானிய கராத்தே விற்பனரான கிராண்ட் மாஸ்டர் ஹன்ஸோ ஹிரகசு கனசவா சபையின் அங்கீகாரம் பெற்ற பயிற்றுநருக்கான அங்கீகாரம் பெற்றேன்.
2009இல் இலங்கை கராத்தே சம்மேளனத்தின் நேர்முக தேர்வு மற்றும் செயற்றிறன் தேர்வில் பங்குபற்றி தேர்ச்சி பெற்று கராத்தேயில் தேசிய அங்கீகாரம் பெற்றேன்.
2010இல் இலங்கை பாடசாலைகள் கராத்தே சங்கம் மற்றும் இலங்கை சோட்டோக்கான் கராத்தே சம்மேளனம் ஆகியவற்றின் அங்கத்துவம் பெற்றேன்.
2010இல் அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்ட கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் சம்மேளனத்தின் அங்கீகாரம்பெற்ற பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டேன்.
2010, 2011இல் கராத்தேயின் குமித்தி மற்றும் காட்டாவில் மத்தியஸ்தர் தேர்வில் சித்தியடைந்து, மத்தியஸ்தர் அந்தஸ்தும் பெற்றேன்.
2011இல் மலேசியாவில் சிகான் தான் லோ தைம் இனால் 5ஆம் கறுப்புப்பட்டிக்கு சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டதுடன், அதே வருடத்தில் அமெரிக்காவில் கிராண்ட் மாஸ்டர் கியோஸி டிவைட் ஹோலியினால் 5ஆம் கறுப்புப்பட்டியும் எனக்கு கிடைத்தது.
2012இல் அமெரிக்காவில் கிராண்ட் மாஸ்டர் கியோஸி டிவைட் ஹோலியினால் 'சிகான்' தரத்திற்கு உயர்த்தப்பட்டேன்.
கேள்வி – கராத்தே போட்டிகள் நிமிர்த்தம் வெளிநாடுகளிற்குச் சென்றீர்கள். அங்கு நீங்கள் பெற்ற அனுபவங்கள் பற்றி கூறுங்கள்..?
பதில் - 2005இல் இந்தியாவின் கேரளாவில் சிகான் கோபகுமாரிடம் தற்காப்புக் கலை நுட்பங்களையும், 2010இல் மும்பையில் சிகான் சவுத்ரி சத்ரஜித் இடம் சோட்டோகான் நுட்பங்களையும், சென்னையில் ரென்ஷி சிவபானிடம் நுன்சாக்கு நுட்பங்களையும், மலேசியாவில் சிகான் தான் லோ தைம் மற்றும் பிரித்தானிய கராத்தே நிபுணர் சிகான் நிக்கி அதமு ஆகியோரிடம் சோட்டோக்கான் நுட்பங்களையும், 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் அமெரிக்காவில் கியோஷி டிவைட் ஹோலிடம் சோட்டோக்கான் நுட்பங்களையும், 2013 ஆண்டு ஷிவூ அலன் தண்ணிடம் சீன தற்காப்புக்கலை மற்றும் 'வின்ங்சுன்' நுட்பங்களை கற்றமையை குறிப்பிடலாம்.
கேள்வி - கராத்தே சுற்றுப்போட்டிகளில் நீங்கள் பங்குபற்றிய அனுபவங்களை கூறமுடியுமா..?
பதில் - 2010ஆம் ஆண்டு இந்தியாவில் வேல்ட் சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் சுற்றுப்போட்டியில் பங்குபற்றியிருந்தும் பதக்கங்கள் கிடைக்கவில்லை. 2012ஆம் ஆண்டு மலேசியாவில் AGKF திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் பயிற்றுநருக்கான காட்டா போட்டியில் தங்கப்பதக்கமும், குமித்தி போட்டியில் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.
2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்துக்கியில் நடைபெற்ற KOJF திறந்த சுற்றுப் போட்டியில் காட்டாவில் வெள்ளிப்பதக்கமும், குமித்தியில் சிறந்த 8 போட்டியாளர்களின் நானும் ஒருவனாகத் தெரிவாகினேன். 2013ஆம் ஆண்டு இந்தியாவில் JGSKA திறந்த சர்வதேச காட்டா கராத்தே சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கமும், 2013ஆம் ஆண்டு மலேசியாவில் AGKF திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் காட்டா போட்டியில் வெள்ளிப்பதக்கமும் கிடைத்தன. இதைவிட இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற JSKA காட்டா சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தமையை குறிப்பிடலாம்.
கேள்வி - கராத்தே துறையில் உங்களின் இலக்கு என்ன என்பது பற்றி கூறுங்கள்..?
பதில் - கராத்தேயில் மறைந்து காணப்படுகின்ற உயர் நுட்பங்களை கற்று சிறந்த கராத்தே நிபுணர் ஆக வரவேண்டும் என்பது தான் என் விருப்பம்.
கராத்தே ஒரு தற்காப்புக்கலை மாத்திரம் அல்ல உடல் உறுதி, மன உறுதி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, தன்னடக்கம் போன்ற விடயங்களை எமக்குள் வளர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த கலையாகும். கராத்தே கலையை வகுப்பில் கற்பதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாது தினமும் குறுகிய நேரம் என்றாலும் பயிற்சிசெய்தல் மிக முக்கியமானதாகும்.
கராத்தே பயிலும் மாணவன் தன்னுடைய ஆசிரியருக்கு எந்த காலத்திலும் மரியாதையுடனும் நன்றியுணர்வும் கொண்டவராக இருக்கவேண்டும். கராத்தே வீரர் தாழ்மையும், பிறரை மதிக்கும் பண்பும் இருந்தால் மாத்திரமே கராத்தேயில் மாத்திரமல்ல வாழ்விலும் உயரமுடியும். அவ்வாறே ஏனைய காரத்தே பயிற்றுநர்களையும் மரியாதை செய்தல் முக்கியம்.
'பயிற்சியே மனிதனை நெறிப்படுத்தும்'
நேர்காணல்: கு.சுரேன்