2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தடகள வீராங்கனை லேகாஜினிக்கு அனுசரணை வழங்கும் ஜனனம் அறக்கட்டளை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மைக்காலமாக பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் தடகளப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, வெற்றிகளையும் பதக்கங்களையும் குவித்துவரும் வடக்கைச் சேர்ந்த கமலநாதன் லேகாஜினியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக ஜனனம் அறக்கட்டளை நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. 
 
லேகாஜினிக்காக கழக, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளுக்கான போட்டி ஆடைகள், பயிற்சி ஆடைகள், வழக்கமான ஆடைகள் என்பவற்றோடு, போட்டிகளில் பங்குபற்றத் தேவையான விசேட காலணி, வழக்கமான பயிற்சிகளுக்கான காலணி ஆகியவற்றை ஜனனம் அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் விநாயகமூர்த்தி ஜனகன் இன்று கையளித்தார். அத்தோடு, லேகாஜினின் உடற்தகுதிக்குத் தேவையான ஊட்டப் பொருட்களுக்கான செலவிற்கான பணத்தை மாதந்தோறும் எதிர்வரும் ஒருவருடத்திற்கு வழங்குவதற்கும் ஜனனம் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
 
வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி, இந்தவருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற்றில் கலந்துகொண்டு 200 மீற்றர், 400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன், வடமாகாண மட்டத்தில் 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையையும் அண்மையில் படைத்துள்ளார். 
 
வவுனியா விபுலானந்த கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான ரி.பத்மசொரூபன் அவர்களே லேகாஜினியின் பிரத்தியேக பயிற்சியாளராக லேகாஜினியின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றார். அவரும், வவுனியா நகர விளையாட்டு அதிகாரி தவராஜா கமலனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
 
கமலநாதன் லேகாஜினியின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும், தேசிய மட்டத்தில் அவரது திறமையை அறியக் கொணரும் வகையிலும், அனுசரணையாளராக செயற்படுவதற்கு ஜனனம் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
 
இந்த அனுசரணையின் ஊடாக லேகாஜினிக்கு தேவையான பயிற்சி உபகரணங்கள், தடகளப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஆடைகள் மற்றும் மேலதிக ஊட்டச்சத்து வழங்கல் என்பவற்றில் ஜனனம் அறக்கட்டளை கவனம் செலுத்தவுள்ளது.
 
நாடெங்கிலும் இளைஞர், யுவதிகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களின் திறன் அபிவிருத்திக்கான பங்களிப்பினை வழங்குதல் என்ற அடிப்படையில் தடகள விளையாட்டுக்களில் தேசிய ரீதியில் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக போராடிவரும் கமலநாதன் லேகாஜினிக்கு அனுசரணை வழங்குவதற்கு ஜனனம் அறக்கட்டளை முன்வந்துள்ளது.
 
விளையாட்டுவீர, வீராங்கனைகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சாதனைகளைப் படைத்த பின்னர் அவர்களைத் தேடிச்சென்று அவர்களுக்கான ஆதரவை வழங்குவதைவிடுத்து, அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பிக்கும்போதே அவர்களுக்குரிய உதவிகளை வழங்குவதன் மூலமாகவே அவர்களை உயர்த்த முடியுமென ஜனனம் அறக்கட்டளை நம்புகிறது.
 
"ஏனையோரின் வாழ்க்கையில் வண்ணங்களை ஏற்படுத்துவோம்" என்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் நிறுவனமாக ஜனனம் அறக்கட்டளை (Jananam Foundation) விளங்குகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கின் கல்வி, விளையாட்டு அபிவிருத்திகளுக்கு ஜனனம் அறக்கட்டளை தன்னாலான பணிகளைச் செய்துவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X