.jpg)
-குணசேகரன் சுரேன்
சூசைப்பிள்ளை ஞாபகார்த்த கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் குருநகர் பாடும்மீன் அணி கிடைத்த தண்டனை உதை வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி கோலாக்கி சம்பியன் பட்டம் வென்றது.
ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழகம் மறைந்த கழக அங்கத்தவர் சூசைப்பிள்ளை ராஜ் ஞாபகார்த்த முதலாவது வெற்றிக் கிண்ணத்திற்காக யாழ். கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்தியது.
சுற்றுப்போட்டியில் 12 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியதுடன் அனைத்து போட்டிகளும் விலகல் முறையில் யூனியன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்று வந்தன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 40 நிமிடங்களைக் கொண்ட போட்டியாக நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் குருநகர் பாடும்மீன் அணியும் நாவாந்துறை சென். நீக்கிலஸ் அணியும் மோதின.
இறுதிப்போட்டியின் ஆரம்ப நிமிடங்கள் சென். நீக்கிலஸ் அணியின் பக்கம் இருந்தது. இருந்தும் கிடைத்த இலகுவான உதை வாய்ப்புக்களை அவ்வணி வீணாக்கியது.
இந்நிலையில் சுதாகரித்துக் கொண்ட பாடும்மீன் அணி தமக்கே உரித்தான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.
முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் பெறாத நிலையில் முடிவடைந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் சென். நீக்கிலஸ் அணி முரட்டுத்தனமாக ஆடியதாக கூறி நடுவரினால் பாடும்மீன் அணிக்கு தண்டனை உதை வாய்ப்பு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திய பாடும்மீன் அணி, அதனைக் கோலாக்கி போட்டியில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து போட்டி முடிவடையும் வரையிலும் மேலதிக கோல்கள் அடிக்கப்படாத நிலையில், பாடும்மீன் அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.