2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஊரோடினால் ஒத்தோடு’

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனிதா ஐயங்கரன்

நான்காம் வருடம், 

ஊடகக் கற்கைகள் துறை,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.  

anithaiynkaran@gmail.com

 

 

‘ஊரோடினால் ஒத்தோடு' எனும் கருத்திற்கிணங்க தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தாமதம் ஏற்படுத்தாமல் விரைவாக தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதால் கொரோனாத் தொற்றிலிருந்து மீள முடியும் என்பது, மடு சுகாதார வைத்திய அதிகாரியான டொக்டர் எஸ்.பி.லெம்பேட்டின் கருத்தாகும். இந்த வகையில், கொவிட்-19 தொடர்பான பல விழிப்புணர்வுகள் அரசாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மடு சுகாதார வைத்திய அதிகாரியான வைத்தியர் எஸ்.பி.லெம்பேட் வழங்கிய செவ்வியின் முழு விவரம் பின்வருமாறு:

கேள்வி:  கொரோனாத் தடுப்பூசிகளை மக்கள் முன்வந்து ஏற்றிக் கொள்கின்றனரா? 

ஆம், ஆரம்ப காலங்களில் மக்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான அச்சம் காணப்பட்ட போதிலும் தற்போதைய காலப் பகுதியில் அச்சமானது, தெளிவடைந்து தடுப்பூசியை மனமுவந்து போட்டுக் கொள்கின்றனர்.  

கேள்வி: சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சினோபாரம், கொரோனாத் தடுப்பூசியினை பெரும்பாலான மக்கள் பயமின்றி ஏற்றிக் கொள்கின்றனரா? 

ஆம், கொரோனா உருவாகிய ஆரம்பத்தில் கொரோனா சீனாவிலிருந்து பரப்பப்பட்டது எனும் கருத்து நிலவியதாலும் கொரோனாவைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் பல வகை (6 வகை) உருவாகியமையாலும் மக்கள் மத்தியில் பீதியேற்பட்டதால் சினோபார்ம் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ள ஆரம்பத்தில் பயந்தனர். ஆனால் தற்போது தாமாகவே முன்வந்து ஏற்றிக் கொள்கின்றனர்.  

கேள்வி: எமது மடு பிரதேசத்தில் 20-30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்படுகினற்து. அதில் எத்தணை சதவீதமானோர் ஏற்றிக் கொண்டனர்? 

 60சதவீதத்திற்கு மேற்பட்டோர்.  

கேள்வி: சினோபார்ம் தடுப்பூசி தொடர்பில் மக்கள் மனங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் உங்களது கருத்து என்ன? 

ஊடகங்கள் சிலவற்றின் போலியான, தவறான கருத்துகளால் மக்கள் பீதியடைந்தமை உண்மையாகும். ஆனால், தற்போது அதன் உண்மைத்தன்மை நிலைவரத்தினை ஓரளவுக்கு அறிந்து, சினோபார்ம் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்கின்றனர்.  

கேள்வி: சினோபார்ம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டால் குறிப்பிட்ட சில நாடுகளுக்குச் செல்ல முடியாது எனும் கருத்து சமூக மட்டத்தில் நிலவுகின்றது. அது தொடர்பிலான உண்மைத் தன்மை யாது? 

அவ்வாறான கருத்து நிலவியது உண்மையாகும். இதற்குக் காரணம் ஊடகங்களில் வெளியான செய்தியாகும். ஆனால், உண்மை யாதெனில் உலக சுகாதார மையத்தால் உறுதிப்படுத்தப்பட்டு வழங்கிய தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்ட எவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும். இந்த வகையில் சினோபார்ம் தடுப்பூசிக்கும் உலக சுகாதார மையத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கேள்வி: சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதால் யாதேனும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? 

 இது வரையில் சினோபாம் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்ட எவரும் எங்களிடம் பக்க விளைவுகள் தொடர்பில் முறையிடவில்லை.  

கேள்வி: தடுப்பூசி ஏற்றிக் கொண்ட அன்று குளிக்கக் கூடாது எனக் கூறுவதற்கான காரணம் யாது? 

இதனை உளவியல் சார்ந்து தான் பாரக்க வேண்டும். தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டதன் பின்பு, குளிக்கும் போது இயல்பாகவே வேறொரு காரணத்தினால் அவருக்கு அசாதாரண சூழ்நிலையேற்படும் பொழுது, தடுப்பூசி பெற்றவர் எண்ணக்கூடும் தடுப்பூசி பெற்றதால் தான் தனக்கு இந்நிலையேற்பட்டுள்ளது என்று. எனவே தடுப்பூசி பெற்றதன் பின்பு குளிக்கக் கூடாது எனக் கூறுவதற்கு மருத்துவ ரீதியான எவ்வித காரணங்களும் இல்லை.  

கேள்வி: தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் அற்ககோல் எடுக்கக் கூடாது எனக் கூறுவதற்கான காரணம் யாது? 

அற்ககோலுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்புத் தன்மையைக் குறைக்கும் தன்மையுள்ளது. எனவே, தடுப்பூசியினைப் பெற்றதன் பின்பு, அற்ககோலை உடனே அருந்தும் போது, தடுப்பூசியின் தொழிற்பாட்டினை இது பாதிக்கக் கூடும். இதனால் தான் தடுப்பூசியினைப் போட்டவுடன் குறிப்பிட்ட சில நாள்களுக்கு அற்ககோலை எடுக்க வேண்டாமெனக் குறிப்பிடப்படுகின்றது.  

கேள்வி: 20-30 வயதிற்கிடைப்பட்ட இளைஞர்கள் பயமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக யாதேனும் விழிப்புணர்வு விடயங்கள் பிரதேச ரீதியாக மேற்கொளள்ப்பட்டுள்ளதா? 

குறிப்பிட்ட வயதுப் பிரிவினர்களுக்கு என்றில்லாமல் பொதுவாக தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, துண்டுப் பிரசுரங்கள், வாயிலாகவும் பல அறிவிப்புக்கள் ஊடாகவும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

கேள்வி: இன்னும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாது மறைந்து இருப்பவர்களால் சமூகத் தொற்று திரும்பவும் ஏற்பட வாய்ப்புள்ளதா? 

இவ்வாறான நபர்களுக்குத் தொற்று இருந்தால் இவர்களால் கொரோனாவைப் பரப்ப முடியும். தடுப்பூசி பெற்று ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டாலும் இந் நோய் நிலைமையின் வீரியம் குறைவாகவே காணப்படும். அதேவேளை, தடுப்பூசியைப் பெற்று நீண்ட நாள்கள் சென்றவர்களுக்கு கொரோனாத்தொற்று ஏற்பட நேரிடும் போது கொரோனா கிருமியானது அவர்களது உடலில் இருந்து அழிந்து போகும். ஆனால், தடுப்பூசியினைப் பெறாமல் இருப்பவர்களுக்கு கொரோனாத் தொற்று வந்தால் அவர்களே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகுவர். சில நேரங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது இறக்கவும் கூடும்.  

கேள்வி: கொரோனாத் தடுப்பூசி தொடர்பான போலித் தகவல்கள் பல பரப்பப்பட்டு வருகின்றன. அதனைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எவை? 

போலித் தகவல்கள் பற்றி அரசாங்கத்திற்குத் தெரிய வரும் போது அதனைத் தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தி, சரியான தகவலை ஊடகங்கள் வாயிலாக அரசாங்கம் அறியத்தருகினற்து. இதில் சுகாதார அரச பணியகம் முக்கிய பங்காற்றி வருகின்றது.   

கேள்வி: சினோபார்ம் தடுப்பூசியும் ஏனைய தடுப்பூசிகளைப் போன்று தானா தொழிற்படுகின்றது? 

ஆம், ஒவ்வொரு தடுப்பூசியும் உருவாக்கப்பட்ட விதங்கள் வேறுபடும்.  

கேள்வி: பல மக்களின் கருத்து பைசர் தடுப்பூசி தான் சிறந்தது என்றும் சினோபார்ம் சிறந்ததில்லை என்றும், இது தொடர்பிலான தங்களது கருத்து என்ன? 

ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் இவ்வாறான கருத்து நிலவி வந்தாலும் அது தற்போது படிப்படியாக மாறி வருகின்றது.   

கேள்வி: இறுதியாக கொரோனாத் தடுப்பூசி தொடர்பில் குழப்பமடைந்துள்ள மக்களுக்குத் தாங்கள் கூற விரும்பும் செய்தி யாது? 

ஊரோடினால் ஒத்தோடு.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .