2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எல்லை நிர்ணயம்: நம்பிக்கையை கட்டியெழுப்புமா?

Johnsan Bastiampillai   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்ஸ்மன்

பாராளுமன்றத் தேர்தல்கள் மாவட்ட எல்லைகள்,  மாகாண சபைத் தேர்தல்கள் மாவட்ட எல்லைகள்,  உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் அதிகாரப் பிரதேச எல்லைகள் (மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள்) குறித்த முடிவுகளைக் காண்பதற்காக  எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், தற்போதுள்ள தேர்தல்கள் மற்றும் நிர்வாக முறைமையின் கீழ் சனத்தொகை மற்றும் நிலப் பிரதேசங்களுக்குரிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அடிப்படை விடயங்கள் மற்றும் பணிகளுக்கான கட்டமைப்புகள் தயாரிக்கப்பட்டன.  

2012ஆம் ஆண்டின் 12ம் இலக்க எல்லைகளை வரையறை செய்யும் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இவ்வேலைகள்  இப்போதும் தொடர்கின்றன. ஆணைக்குழுவால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டபோதும் அது எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை வரை சென்றது. நாடாளுமன்றத்திலும் பிரச்சினையானது. மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. முறைப்பாடுகள் சேகரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து எல்லை நிர்ணயத்தை சரியாகவும், ஜனநாயக ரீதியாகவும் மேற்கொள்வதற்காக நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும்  இதனுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினரையும் கொண்ட சர்வ கட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. ஆனால் அதன் எதிர்பார்ப்பு கைகூடவில்லை.  அதனைத் தொடர்ந்தும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும்படி அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 

 நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அல்லது பிரசைகளுக்கும் சமமான,  உயர்ந்த அளவில் சமமான  பிரதிநிதித்துவம் கிடைக்கத்தக்க விதத்தில் மற்றும் மக்களின் சனநாயக உரிமைகள், அந்த  நிலைமையைப் பாதுகாக்கின்றவாறு வினைத்திறனுடன் அதனை உறுதி செய்வதற்காக தேர்தல்கள் மாவட்டங்கள் மற்றும் ஏனைய நிருவாக எல்லைகளை நிர்ணயம் செய்தல்,  தேர்தல் மாவட்டம் அல்லது நிருவாக பிரதேசம் அல்லது கல்வி, சுகாதார அல்லது பாதுகாப்பு போன்ற சமூக - பொருளாதார சேவைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் என்ற முக்கிய நோக்கங்களுடன்  தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் எல்லை நிர்ணயம் தொடர்பில் எதற்காக இது என்ற சந்தேகங்களே தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. 

எல்லை நிர்ணயம் இன்றி மாகாண சபைத் தேர்தலே நடைபெறாது என்கின்ற கடுமைக்குள் இலங்கை இருக்கிறது.  மாகாண சபைகள் எல்லையிடப்பட்டு, மாகாணங்கள் ஒவ்வொரு காலகட்டங்களில் பிரிக்கப்பட்டன. இப்போது 9 மாகாணங்களுடன், 25 மாவட்டங்களைப் கொண்டு நமது நாடு காணப்படுகிறது. உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. அடிப்படையில் பிரதேச செயலகங்களின் எல்லைகள் உள்ளூராட்சி அலகுகளின் எல்லைகளாகும். ஆனால் பல உள்ளூராட்சி அலகுகளின் எல்லைகள் பிரச்சினைகளுக்குள் உள்ளன. பலவற்றுக்கு எல்லைகள் இல்லை. வர்த்தமானி அறிவித்தல்கள் கூட இல்லாது பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன.  இவ்வாறான பிரதேச செயலகங்களுக்கு எல்லைகள் இடப்பட வேண்டும் என்பதுடன், வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்படவேண்டும். 

இலங்கையில் இன முரண்பாடு தலை தூக்கியிருந்த காலத்தில் பல பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கு சரியான எல்லைகள், வரைபடங்கள்கூட இல்லை என்ற நிலை காணப்படுகிறது. அதில் ஏற்கெனவே இருந்த பிரதேச செலயகத்தின் பாரம்பரியம் பாதுகாக்கப்படவேண்டுமென்ற கோசமும் இருக்கிறது. இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எல்லை நிர்ணயத்தில் அவ்வாறானவற்றுக்கும் தீர்வுகள் கிடைக்கக்கூடும். 

ஆனால் தமிழர்கள் நாட்டில் தமக்கான அதிகாரம் தேவை என்ற முயற்சியில் புதிய அரசியலமைப்பைப்பற்றியும் அதிகாரப்பகிர்வு குறித்தும் பேசிக் கொண்டிருக்கையில் மாவட்டங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் குறைக்கப்படுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தினைக் குறிப்பிடமுடியும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தங்களது இருப்புகளை திடப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இப்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எல்லை நிர்ணயச் செயற்பாடானது இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இருந்தாலும்,  மேற்கொள்ளப்படவிருக்கின்ற எல்லைகளின் திருத்தத்தில் சகல கட்சிகளினதும் வேண்டுகோளுக்கிணங்க எல்லை நிர்ணயம் தொடர்பில் மேல்முறையீடுகள் பெறப்பட்டு  ஆராயப்பட்டு வருகிறது. இந்த ஆராய்வு அனேகமாக எதிர்வரும் மாதங்களுக்குள் முடிவுக்கு வரலாம். அவ்வாறான வேளைகளில் எழப்போகும் குழப்பங்கள் எவ்வாறு தீர்க்கப்படும் என்பதே இப்போதைய கேள்வி. 

தமிழர்கள் தங்களுடைய பிரதேசங்களின் எல்லைகளை உறுதிப்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். வடக்கு கிழக்குப்பிரதேசங்களின் எல்லைகளிலும்  உள்ளேயும் சிங்களவர்களைக் குடியேற்றம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அம்பாறைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வனப்பிரதேசங்களில் காணிகள் ஒதுக்கப்பட்டு பயிரிடலுக்காக அத்துமீறிய அனுமதிகள் அமைச்சர் மற்றும் உயர் பதவியிலுள்ள அரசியல்வாதிகளால் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசங்களில் தமிழர்கள் காலங்காலமாக மேய்சல் தரையாக பாவித்துவந்த பகுதிகளில்  அம்பாரை, பொலநறுவை  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அது தங்களது மாவட்டத்துக்குரியது என்ற தொனியில் அத்துமீறிச் செயற்படுகிறார்கள். அதே போன்று பல பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு குடியேற்றங்கள் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இதே நிலைமை வடக்கின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. 

இவ்வாறான சூழலில் ஏன் இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்ற கேள்விக்கு இன்னமும் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. அதே போன்று முஸ்லிம் மக்கள் தங்களுடைய சனத்தொகைப் பெருக்கத்தைக் காரணம் காட்டி நிலம் கோருகின்ற,விஸ்தரிக்கின்ற, பிரதேச செயலக அலகுகள் கோருகின்ற சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தினையே வலுப்படுத்துகின்றது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளூராட்சி சபைகள் செயற்படுவதில் சிக்கல் உள்ளது. என்றாலும்  எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் காணப்படுகின்றன என்பதே யதார்த்தமான சூழலாகும். இதற்குள் இருக்கின்ற அரசியலானது பெரும் சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது. முஸ்லிம்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே கடைப்பிடிக்கும் ஆளும் தரப்புடனான இணக்க ஒழுங்கு மிகவும் பலம் மிக்கதாக மாறிவருகிறது. இது பெரும் ஆபத்தாகவே இருக்கப்போகிறது. எல்லை நிர்ணயம் இந்த அழுத்தத்தால் அசைந்துவிடப் போகிறது என்றும் சந்தேகம் இருக்கிறது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் நிலைப்பாடே இதில் பிரச்சினையாகும். 

ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதும் விசாரணைகளை நிகழ்த்துவதும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதும் நமது நாட்டுக்கொன்றும் புதிதல்ல. நாட்டில் ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இருக்கின்ற முரண்பாடுகளை மேலும் மேலோங்கச் செய்வதற்கு இந்த எல்லை நிர்ணயம் உதவி புரியலாகாது என்பதே தமிழ் மக்கள் சார்பில் இருக்கின்ற கோரிக்கையாகும். இதனையே அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பார்கள் என்றே கொள்ளலாம். வேண்டுமெனும் போது வேண்டாமென்பதும் வேண்டாமெனும் போது வேண்டுமென்பதும் ஒன்றல்ல என்பதற்கேற்ப எல்லை நிர்ணயத்திலும் சிக்கல் இருக்கத்தான் செய்யும். 

அரசாங்கம், மூன்று அமைச்சர்கள் மாற்றம், இரண்டு தலைவர்கள் மாற்றம் ஆகியவற்றைக் கண்டு வளர்ந்திருக்கின்ற எல்லை நிர்ணய ஆணைக்குழு முன்வைக்கப் போகும் தீர்மானம் நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற அனைத்துப்பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமைய வேண்டும். இல்லையானால்  அதன் அறிக்கையில் பிரயோசனம் இல்லையென்றே சொல்லவேண்டும். 

வெளிவரப்போகும் திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய முழுமையான அறிக்கை வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் நாட்டின் ஆளும் வர்க்கம் சார்ந்து இருக்கின்ற பரஸ்பர நம்பிக்கையீனத்தினை இல்லாதொழிப்பதாக, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும். அவ்வாறானால் நடைபெறப்போகும் அரசியலமைப்புத்திருத்தத்திலும், மாகாண சபைத் தேர்தலிலும் கட்டாயமாக அது பிரதிபலிக்கும். உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதுடன் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், அதனை உறுதிப்படுத்துவதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கையாக எல்லை நிர்ணயம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புவோமாக.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X