2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒரு ‘நாணயக்கயிறு’ வேண்டும்

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்

 

 

 

முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை, அநுராதபுரம் சிறைச்சாலையில், வெட்கப்படத்தக்க, பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டமை, ஒரு தனிமனித ஒழுக்கச் சீர்கேடான நடத்தை எனப் புறமொதுக்கி வைத்துவிட முடியாது. 

சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரை, அவரது சட்டத்தரணியோ, உறவினரோ சந்திப்பதாயின் விருந்தினர் அறையிலேயே சந்திக்க முடியும். சிறை அதிகாரிகளைத் தவிர, வெளியார் எவரும் சிறைச்சாலை வளாகத்துக்குள் செல்ல முடியாது; பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சிறைக்கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் என்ற தனது பதவிவழி அதிகாரத்தின் நிமித்தம், எந்தவிதமான அலுவலக தேவையும் இல்லாமால், இரவு வேளையில், நண்பர்களுடன், மதுபோதையில் சிறைச்சாலைக்குள் நுழைந்தமை, அப்பட்டமான அதிகார துஸ்பிரயோகம் ஆகும். 

இராஜாங்க அமைச்சரின் அதிகாரம் தம்மை எதுவும் செய்துவிடலாம் என்ற அச்சத்தால், அதிகாரிகள், லொகான் ரத்வத்தையின் செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவும் சிறைச்சாலை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவும் ஆரம்பத்தில், “அவ்வாறான சம்பவம் எதுவும் நடக்கவில்லலை” என்று தெரிவித்திருந்தமை, இலங்கை அரசாங்கத்துக்கே உரித்தான, எதையும் மூடி மறைக்கும் போக்கின் அடிப்படையில், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். 

ரத்வத்தை, அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் என்ன நோக்கத்தில் நுழைந்தார் என்பதன் உண்மை வெளிவரப்போவதில்லை. அது எவ்வாறாக இருந்தாலும், லொகான் ரத்வத்தை, தமிழ்க் கைத்திகளை அழைத்து, அதில் இருவரை முழந்தாள்படியிட வைத்து, ஒருவரின் கன்னத்தில் துப்பாக்கியை வைத்து, “உங்களை கொலை செய்யக்கூட என்னால் முடியும்” என்று கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.  

யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் என்ற 33 வயது கைதியே, இவ்வாறு துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர், 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்து. 

சிறைச்சாலைக்குள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாகவோ, விசாரனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் கைதிகளாகவோ, அல்லது எந்தவிதமான குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்படாத கைதிகளாகவோ இருக்கலாம். ஆனால், லொகானின் செயற்பாடுகளுக்கு எதிராக, இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் பல வழக்குகளைத் தொடுக்க இடமிருக்கிறது. 

எந்தவொரு பொது இடத்தில் வைத்து, சாதாரண நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தல் விடுத்தால், குறித்த நபரைப் பொலிஸார் கைது செய்யாமல், “முறைப்பாடு கிடைக்கப்பெறவில்லை” என்று, அந்தக் குற்றச்செயலை கண்மூடி புறக்கணித்து விடமுடியுமா? ஆனால், பொது மக்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர அவ்வாறான கருத்தொன்றையே தெரிவித்து, நடவடிக்கை எடுக்காமல், காப்பாற்றும் போக்கொன்றையே கடைப்பிடிக்கின்றார். 

எனவே, லொகான் ரத்வத்தை சிறைச்சாலையில் நடந்து கொண்ட விதமானது, இந்த நாட்டின் சிறுபான்மையினரை அடிமைகளாக எண்ணும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மனநிலையையே ஆப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. 

முக்கியமாக, லொகானின் செயற்பாடு, இந்த அரசாங்கத்தில் உ ள்ள பெரும்பான்மையான அரசியல்வாதிகளின் மனநிலையை ஒத்ததாக, ‘ஒருபானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம்’ என்பதுபோல் காணப்படுகின்றது.  

சிங்கள - பௌத்தர்களே இந்நாட்டின் முதன்மைக் குடிகள்; அவர்கள், இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; எதை வேண்டுமானாலும் செய்யலாம்; அவர்கள் எந்தவகையான சட்ட விதி முறை மீறல்களிலும் ஈடுபடலாம். அதை எவரும் தட்டிக் கேட்கக் கூடாது. அவ்வாறு, இவர்களின் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களை கேள்விக்கு உட்படுத்தினால், இலங்கையின் இறைமைக்கு எதிரானவர்கள்; துரோகிகள் எனப் பிரசாரப்படுத்தப்பட்டு, இல்லாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள். இத்தகையதொரு போக்கே இல‍ங்கையின் தேசிய அரசியலில் நிலவுகின்றது. 

அதனால்த்தான், எதிர்க்கட்சியும் கூட, அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ அநுராதபுர சிறைச்சாலை சம்பவத்துக்கு எதிராக, பொதுவாக வார்த்தை ஜாலங்களால் கண்டித்திருந்தாரே தவிர, ஆக்கபூர்வமாக, சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்போவதாகவோ, எடுக்கப்படவேண்டும் என்றோ  குறிப்பிடவில்லை. அவ்வாறு, சிங்கள பௌத்த பேரினவாத போக்கை, ஓரளவுக்கு மேல், தடுக்க முனைபவர்களின் அரசியல் வாழ்க்கை, தெற்கில் அஸ்தமிக்கச் செய்யப்படும் அளவுக்கு, பேரினவாதக் கட்டமைப்பு பலம்கொண்டதாகக் காணப்படுகின்றது.  

சிறுபான்மையினருக்கு எதிராக, துப்பாக்கியை எடுத்து கொலை அச்சுறுத்தல் விடுப்பது, ஜனநாயகத்துக்கும் இலங்கையின் இறைமைக்கும் ஏற்ற செயல் என்று, ஒரு மக்கள் கூட்டம் நம்பவைக்கப்பட்டு, அந்த மக்கள் கூட்டத்தால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாலேயே அவர்கள் வழிநடத்தப்படுகின்றார்கள்; இந்த நாடு வழிநடத்தப்படுகின்றது. இது, சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றது. 

லொகான் ரத்வத்த என்ற தனி நபரை எடுத்துக்கொண்டால், அவர், கண்டி சிங்கள, பௌத்த வழிவந்த மேட்டுக்குடியின் வாரிசாவார். இவருடைய தந்தையார் அநுருத்த ரத்வத்தை, கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக சிறிது காலம் இருந்துள்ளார். ரத்வத்தையின் தந்தையர் ஹரிஸ் லூக் ரத்வத்தையும் கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக நீண்டகாலம் பதவிவகித்துள்ளார். கண்டி, தலதா மாளிகையின் தியவதன நிலமே என்பது, இலங்கை அரசியலில் மிகஆழமாக ஊடுருவும் வல்லமை கொண்ட பௌத்த பீடமொன்றின் பதவியாகும். 

இவ்வாறு, சிங்கள தேசிய அரசியல் செல்வாக்கும், பௌத்த பீடத்தின் செல்வாக்கும் கொண்ட ஒருவரின் செயற்பாட்டை கேள்விக்கு உட்படுத்துவது, பாரதூரமான விளைவுகளைத் தரும் என்ற அச்சம் சிங்கள - பௌத்த பேரினவாத தளத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்றமை, லொகானின் சம்பவத்தில் இருந்து தௌிவாகின்றது.  

தமிழ்த் தேசிய கட்சிகள் உட்பட, சிங்கள புத்திஜீவீகள், நல்லிணக்க அமைப்புகள், உலக நாடுகள், சர்வதேச அமைப்புகள் என உலகமே லொகானின் நடவடிக்கையைக் கண்டிக்கின்றன. ஆனால், அவர், “அரசாங்கத்தை சங்கடப்படுத்த விரும்பாத காரணத்தாலேயே, தான் முன்வந்து இராஜினாமா செய்ததாகவும் சிறைச்சாலை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அது ஒரு பெரிய நெருப்புக் குவியலாக இருந்ததாகவும், குறுகிய காலத்தில் தீயை அணைத்து, சிறையை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டு வர முடிந்தது என்றும் எனவே, தான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறை மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தனது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

லொகான் ரத்வத்தை, கண்டி மாவட்டத்தில் இருந்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டவர். கண்டியில் 10 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட சம்பவம், துப்பாக்கியை காட்டி சுற்றியுள்ள அனைவரையும் பயமுறுத்தி, வானத்தை நோக்கி சுட்ட பல சம்பவங்கள் அவருக்கு எதிராகப் பதிவாகியுள்ளதுடன் சிறைத்தண்டனையையும் அனுபவித்துள்ளார். இத்தகைய பாரிய குற்றச் செயல்கள் புரிந்தவர் எனக் குற்றஞ்சாட்டையும் பின்புலங்களையும்  கொண்ட ஒருவருக்கு, தேசிய பட்டியல் நியமனம் வழங்கியமை என்பது, அந்தக் கட்சி, எத்தகைய பாதையில் அரசாங்கத்தை வழிநடத்திச் செல்கின்றது என்பதை வெளிப்படுத்தியது. அத்துடன், சிறைச்சாலை சம்பவம் அதை உறுதிப்படுத்தி உள்ளது. 

லொஹான் ரத்வத்த, பாராளுமன்றத்தின் நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும்  பதவிவகிக்கின்றார். இவர் சிறைச்சாலைகள் அமைச்சிலிருந்து மாத்திரமே இராஜினாமாச் செய்துள்ளார் என்பது கவனத்துக்குரியது. அவருடைய ஏனைய பதவிகள் அனைத்திலும் தொடர்ந்து நீடித்து வருகின்றார். அவர் இராஜினாமாச் செய்யாத இராஜாங்க அமைச்சுப் பதவிகளின் மூலம், இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கான சிறப்புரிமைகளை தொடர்ந்தும் அனுபவித்து வருவார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  பேரவை அமர்வுகள் நடைபெற்று வரும் காலப்பகுதியில், பேராசிரியர் பீரிஸால் உருவாக்கப்பட்ட இலங்கை மீதான ஒரு கவசத்தை, லொகானின் இந்தச் செயற்பாடு சுக்குநூறாக்கியுள்ளது. அதனால், சிறைக் கைதிகளுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையை இராஜினாமாவுடன் மூழ்கடிக்கும் விதத்திலேயே அவரின் இராஜினாமா அமைந்துள்ளது. 

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக, லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் பொலிஸ் தலைமையகத்திலும்  முறைப்பாடு செய்துள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையின் சி.சி.டி.வி காட்சிகளை அழிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகள் தங்களது சட்டத்தரணிகள் ஊடாக முறைப்பாட்டை பதிவு செய்து, சட்டரீதியாக இந்தச் சம்பவத்தை அணுகுவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சிகள், தமது உறுதியான நடவடிக்கைகளை வௌிப்படுத்த வேண்டும். அதுவும், கட்டுமீறி தறிகெட்டு ஓடும் சிங்களப் பேரினவாதத்துக்கு ஒரு ‘நாணயக்கயிறு’ ஆக அமையவும் வாய்ப்பு ஏற்படும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .