2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கார்ட்போர்ட் சவப்பெட்டிகள் தாங்குமா?

Johnsan Bastiampillai   / 2021 ஜூன் 20 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னதான் சொத்து,சுகம்  என வாழ்ந்தாலும் இறுதியில்  என்றாவது ஒருநாள்அனைத்தையும்  இழந்து வெற்றுடலாய்  இந்த மண்ணுக்கு விடைகொடுக்கத்தான் போகிறோம்.  ஆனால், அதற்கிடையில் எத்தனை ஆசைகள், எத்தனை கோபதாங்கள், எத்தனை பிணக்குகள். அதிலும்  இன்றைய கொரோனா காலக்கட்டத்தில் ஏழை,  பணக்காரன் என்ற எவ்வித வேறுபாடின்றி  உயிர்கள் காவுகொள்ளப்படும் நிலையில், நாம் கோடியோடியாய் கொட்டி அழகுப்  பார்த்து நிர்மாணிக்கும் நம் வீட்டில்  எமது சடலத்தை ஆசைக்குக்கு கூட   வைத்திருக்க முடியாத நிலையில், அவசர அவசரமாக சுடச்சுட நாம் மண்ணுக்கு விதையாகின்றோம்.

ஆனால், உயிரிழப்பவர்களின் அடக்கமோ தகனமோ செய்யும் முறையோ அல்லது அவர்க​ளது சடலத்தை வைத்திருக்கும் சவப்பெட்டியை வைத்தே அவர் ஏழையா, பணக்காரனா அல்லது மத்தியவர்க்கத்தினரா என எடைப்போடலாம். அதனை சவப்பெட்டிகளின் தரமும் விலைகளும் வேலைப்பாடுகளும் நிர்ணயம் செய்துவிடுகின்றன.

இந்தச் சவப்பெட்டிகள் இதுவரை மரப்பலகைகள் மூலமே செய்யப்பட்டு வந்தன.ஆனால், அண்மைய சில காலங்களாக உலக நாடுகள் ‘கார்ட்போட்’ சவப்பெட்டிகளை தயாரிப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றன. குறிப்பாக, பல வருடங்களுக்கு முன்பே இதன்பாவனை அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கி, தற்போது ஆசிய நாடுகளிலும் இந்தத் தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எமது நாட்டிலும் தற்போது மெதுவாக ‘கார்ட்போட்’ சவப்பெட்டி தயாரிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில், தெஹிவளை - கல்கிஸ்ஸ நகர சபையின் உறுப்பினரான பிரியந்த சஹபந்துவால் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் கீழ் இத்திட்டம் ​ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலமும் இக்கார்ட்போட் சவப்பெட்டியில் வைத்து மே மாதம் 25ஆம் திகதி முதலாவதாக அடக்கம் செய்யப்பட்டது.  

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படாத அதேவேளை, இதற்கான செலவுகளை உறவினர்களே செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாவதுடன், இச்செலவு 30,000- 45,000 வரை செல்வதாகவும் இன்றைய பொருளாதார நிலையில்,  ஒருவேளை உண்ணுவதற்கே விழிபிதுங்கி நிற்கும் நடுத்தர மற்றும்  வறுமைக்  கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள்  அத்தனை ஆயிரங்களைக் கொடுத்து  சவப்பெட்டியை வாங்க  எங்கே செல்வார்கள். இதற்கு மாற்றீடாகவும் மரத்தால் ஆன சவப்பெட்டிகளுக்காக மரங்கள் தறிக்கப்படுவதையும் வனங்கள் அழிக்கப்படுவதையும் தடுப்பதற்காகவும், மர சவப்பெட்டிகளை எரிக்கும் போது அதிக மின்செலவு, நேர விரயம், எரிவாயு விரயம், இதனால் வளியுடன் கலக்கும் காபன் என்பவற்றை இந்த கார்ட்போர்ட் சவப் பெட்டியால் முழுமையாக் குறைக்க மு​டியும் எனவும் கழிவாக அகற்றப்படும் கடதாசி, கார்ட்போட்களை மீள்சுழற்சி செய்து இது உருவாக்கப்படுவதால், சுற்றாடலுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இ்ல்லை என தெஹிவளை- கல்கிஸ்ஸ நகர சபையின் உறுப்பினரான பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத காட்போர்ட் சவப்பெட்டியை நாம் வரவேற்கும் அதேவேளை, தொழின்முறை ரீதியாக மரப்பலகைகளால் சவப்பெட்டிகளை செய்து வருபவர்களின் நிலையையும் ஆரோய வேண்டுமல்லவா?

நாம் எல்லோரும், எவரும் உயிரிழக்க கூடாது என்றே எண்ணுவோம். அதிலும் இந்த் கொரோனா நேரத்தில் முதலாவது உயிரிழப்பு இலங்கையில் பதிவானபோது அதிர்ச்சியடைந்தோம், ஆனால் அது  பத்தாக அதிகரித்து, தற்போது  நாளொன்றில் குறைந்தது  50 பேர் உயிரிழக்கும் நிலையை வந்தடைந்தள்ளது. உண்மையில், ஒவ்வோர் உயிரும் பெறுமதியானது. 

ஆனால் எவராவது உயிரிழந்தால் தான், தமது கைக்கு வருமானம் கிடைக்கும் மற்றொரு தரப்பும் எம்மத்தியில் இருக்கிறார்கள். அதில் முதலாவதாக சவப்பெட்டி செய்பவர்கள்; இரண்டாவதாக மலர்ச்சாலை உரிமையாளர்கள்; மூன்றாவதாக மலர்வளையங்கள் உள்ளிட்டவைகளை தயாரிப்பவர்கள். இறுதியில் மயானங்களில் சடலங்களை எரிக்கும், புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்.

ஆனால், இன்று இவர்களுள் சவப்பெட்டிகளை தயாரிப்பவர்களின் தொழிலுக்கே ஆப்பாக இந்த கார்ட்போர்ட் சவப்பெட்டிகளின் வரவு அமைந்துவிடுமென தொழின்முறை சவப்பெட்டி தயாரிப்பாளர்களின் கவலையும் நியாயமானதே.  

இந்த முறை தொடர்ந்தால் தமது தொழில் முற்றாக அழிவடைந்து விடும் என தொழின்முறை சவப்பெட்டி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“6,500 ரூபாய்க்கு காட்போர்ட் சவப்பெட்டி விநியோகிப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலை நீடித்தால் தொழின்முறை ரீதியாக சவப்பெட்டிகளை தயாரிக்கும் எம்போன்ற எத்தனையோ பேரின் நிலை மிகவும் மோசமடையும். நாம் எவ்வாறு வாழ்வது? இதற்கு  தொழின்முறை சவப்பெட்டிகளைத் தயாரிக்கும் அனைவருக்கும் எதிர்ப்பை தெரிவிக்க முன் வரவேண்டும்” என்றார்.

அவ்வாறு கார்போட் சவப்பெட்டிகளை அரசாங்கம் ஊக்குவித்தால், சாதாரண காரணங்களை அடிப்படையாக வைத்து, நிவாரண உதவிகளையாவது வழங்க முன்வரவேண்டும். சிறு வியாபாரிகளை பாதுகாக்க முன்வரவேண்டும் என்றார்.

“பாரியளவில் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளனர். அவர்களின் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கார்போட் சவப்பெட்டி முறை 100 சதவீதம் வெற்றியளிக்காது என நம்புகிறோம்” என்றார்.

“நாம் சிறிதளவு இலாபத்திலேயே அப்பெட்டிகைளை தயாரித்து விநியோகித்தாலும் மலர்ச்சாலைகளிலேயே அதிக பணம் அறவிடப்படுகின்றது எனத் தெரிவித்த அவர், சாதாரண மக்கள் இதனை விரும்பினாலும் உயர் வகுப்பினர் கார்ட்போட் பெட்டியை விரும்பமாட்டார்கள்.

எனவே, நாட்டில் கொரோனா  தொற்றையடுத்து சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், கார்ட்போட் சவப்பெட்டிகளின் வரவு நிலைத்து நிற்குமா அல்லது ​தொழின்முறை சவப்பெட்டி உற்பத்தியாளர்களின்  பிழைப்பில் மண் விழுமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

 

 

 

 

மகேஸ்வரி விஜயனந்தன்
mayurisaai@gmail.com

(கட்டுரையாளர்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X