2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிற்பத்தில் காலநிலையும் தாக்கம் செலுத்தும்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரா. யோகேசன்

ogesan12press@gmail.com

 

 

 

 

மலையகத்தில், சிற்பத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வரும் ஹட்டன் ஸ்டதன் தோட்டத்தை சேர்ந்த ஜெயமோகன் சிவலால் ரவிமோகன், சிற்பத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு அத்துறையில், மனமகிழ்ச்சி ஏற்படுவதோடு, ஒழுங்கம் நிறைந்த வாழ்க்கை முறையும் ஏற்படுவதாகத்  தெரிவிக்கின்றார். அந்தவகையில் இவ்வார  பகுதிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வி கீழே தரப்படுகின்றது. 

கேள்வி: சிற்பத்துறையில் ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை?

பதில்: பாடசாலை காலங்களில் ஆக்கம், சித்திரம் போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. பிற்பட்ட காலங்களில், எனது தந்தை இத்தொழிலையே முதன்மையாகக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் வேலை செய்யும் இடங்களுக்குச் சென்று, நானும் எனது ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்திருந்தேன். 

தவிரவும், எனது பரம்பரை கூட, இந்தச் சிற்பத் துறையில் ஈடுபட்ட ஒரு பரம்பரையாக இருந்து வந்துள்ளது. இதுவும் ஒரு காரணம், நான் இத்துறைக்குள் வரவதற்காகும். தவிரவும், எனது தந்தை இவ்வாறு சிற்ப வேலைகள் மேற்கொண்டிருந்த போது, அவருக்கு உதவி செய்தல், அதை அவதானித்தல், செய்து பார்த்தல், ஆர்வம் என்பன, எனக்குள்ளும் சிற்பத்துறை வளர்வதற்குக் காரணமாக இருந்ததன. 

கேள்வி: சிற்ப கலையை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: நாம் வணங்கும் கடவுளை உருவாக்கும் ஒரு மனநிலையை, என்னில் உருவாகின்றது. நான் ஒரு கலைதுறையில் ஈடுபடுகின்றேன் என்ற எண்ண நிலை தோன்றுகின்றது. மேலும், இத்துறையில் ஈடுபடுபவர்கள் ஒழுக்கத்துடனும் மிக கண்ணியத்துடன் இருப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்துகின்றது.

கேள்வி: சிற்பக் கலையை இலங்கையில் எந்தெந்த பிரதேசத்தில் மேற்கொண்டீர்கள்; அங்கு கிடைத்த அனுபவம் என்ன?

பதில்: ஹட்டன், ஸ்ஸலாவ, களுத்துறை, மதுகம, மஸ்கெலியா, நாவலபிட்டி, கண்டி, கம்பளை, தலவாக்கலை, நோர்வூட், ரம்பொட, வத்தளை, கொழும்பு போன்ற இடங்களிலும் குறிப்பாக, மலையக தோட்ட பகுதிகளிலும்  சிற்பத்துறை சார்ந்த பலவேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, வெப்பம் அதிகமுள்ள பிர​ேதுசங்களில் வேலை செய்திருக்கின்றேன். அப்பிரதேசங்களில் நேரத்தை கருத்திற்கொண்டுதான் வேலை செய்யவேண்டி வரும். அவ்வாறு அதிக வெப்ப பிரதேசங்களில் குறிப்பாக மத்துகம, களுத்துறை போன்ற பிரதேசங்களில் வேலை செய்யும் போது, சீமெந்தினை பூசும் போது, குறுகிய நேரத்தில் காய்ந்து விடும். 

குறிப்பாக, சிற்ப வேலைகளின் போது, ஒரு குறிப்பிட்ட ஒரு நாளில் நிறைவு செய்ய வேண்டும். குறிப்பாக, முக வடிவமைப்பு; அன்றைய தினத்திலே நிறைவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு நாள்கள் அடுத்த தினத்திற்கு செல்லும் போது, பூசப்படும் சீமெந்தால் பாரிய அசௌகரியங்களை சந்திக்க வேண்டி வரும். இது மலையக பிரதேசத்துக்கும் ஏனைய வெப்ப பிரதேசத்துக்குள்ள  வேறுபாடாகும். 

குறிப்பாக மலையக பிரதேசத்தில் சீமெந்து பூசப்படும் போது, அடுத்த நாளிலும் கூட வேலை செய்ய முடியும். ஆனால் வெப்ப பிரதேசங்களில் அவ்வாறு இல்லை. சில சந்தர்ப்பங்களில் வெடிப்பு கூட ஏற்பட்டு விடும். இது எமது வேலையை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒரு சவாலை ஏற்படுத்தி விடும். 

மேலும், மலையகப் பிரதேசத்தில் நாம் வாழும் பிரதேசமாவதால், சூழலுக்கு ஏற்றவகையில் பணியை நிறைவு செய்ய முடியும். தவிரவும் ஏனைய வெப்ப பிரதேசத்தில் சென்று மேற்கொள்ளும் போது, முதலில் சூழலுடன் இயைபாக்கம் அடைய வேண்டிய ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே சிற்பத்துறையில் காலநிலையும் செல்வாக்கு செலுத்திகின்றது என்பதை மேற்படி விடயங்களிலிருந்து புரிந்துகொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X