2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாக். முயற்சிகளை தொடர்ந்து முறியடிக்கும் இந்தியா

Editorial   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

காஷ்மீர் பிரச்சினையானது, இந்தியாவுக்கும் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையில், காஷ்மீர் மாநிலம் தொடர்பாக நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சினையாகும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற தினம் முதல், தீர்க்கப்படாத பிரச்சினைகளில் ஒன்றாகவே இது இருந்துவருகிறது.

நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் அதனைத் தொடர்ந்து போர் அல்லது இராணுவ நடவடிக்கை நடைபெறுவதும், அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வதும் என்று இருந்தாலும் காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்தே வருகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு விடிவு காலம் வருமா என்பது பொதுமக்கள் உட்பட பலரினதும் எதிர்பார்ப்பாகும்.

ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா), 1947 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது என்பது வரலாறு. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.

அப்போது, டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் காஷ்மீர் சமஸ்தானத்துக்கு மன்னராக இருந்தார். இவர், ஜம்மு - காஷ்மீர் சுதந்திர சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னராவார். இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக இவர் அறிவித்தார்.
 
ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும், ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு, எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென முயன்று கொண்டிருந்தனர்.

1947க்கு முன்பிருந்தே, காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து, 1932ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு என்ற கட்சி போராடி வந்தது.

1944இல் புதிய காஷ்மீர் என்ற பெயரில் கொள்கை அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில், காஷ்மீர், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும், சட்டத்துக்கு முன் அனைவரும் சமம், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை கேந்திர தொழிற்சாலைகள் தேசிய மயம், ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படவும், தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமைபோன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

பாகிஸ்தானின் முதலாவது தலைமை ஆளுநர் முகம்மது அலி ஜின்னா, ஓர் இஸ்லாமிய அரசியல்வாதி. அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த இவர், பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு தனிநாடானபின்னர், அந்த நாட்டின் தலைவரானார். காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஜின்னா எண்ணினார். ஆனாலும் எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழும் சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டு, மக்கள் திரட்டப்பட்டனர். காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். 1947 ஓகஸ்ட் மாதம், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்திருந்தார்.

1947ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதியன்று, பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் ஸ்ரீ நகரையே வளைத்துக் கொண்டன பாகிஸ்தான் படைகள். தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்தான் பாகிஸ்தான் படையை எதிர்த்து ஆங்காங்கே போராடினர்.

மன்னர் ஹரிசிங், இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைத்தார். 1947 ஒக்டோபர் 26இல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உடனே, பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. ஸ்ரீ நகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.

காஷ்மீர் இந்தியாவுடன் தற்காலிகமாகத்தான் இணைக்கப்பட்டது. அதாவது, காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று விடயங்களை மட்டும் இந்தியா கவனித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. மற்றபடி, இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை. காஷ்மீர் தற்காலிகமாக இந்தியாவின் பகுதியாகிவிட்டது என்ற நிலையை அந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு அளிக்கவில்லை.

அந்த ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையும் சேர்க்கப்பட்டது. அதாவது, படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என்பதே அது. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், பின்னாளில் ஜனசங்கத் தலைவராக மாறிய ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. (ஆதாரம்: காஷ்மீர்  உண்மையில் நடந்தது என்ன? என்ற நூல். ஆசிரியர்: அஜித் பிரசாத் ஜெயின், 1950இன் ஆரம்ப ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர்)

இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 3ஆவது விதியைக் காட்டி, ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இரு நாட்டுப் படைகளும் ஆக்கிரமித்திருந்த காஷ்மீரகத்தின் பகுதிகள், அந்தந்த அரசின் படைகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஐ.நாவின் மேற்பார்வையில் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும் என்று ஐ.நா. தீர்மானித்தது. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறுதான் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன.

காஷ்மீரில் நடைபெற்றுவரும் வன்முறைகள் காரணமாகவே, இந்தியா அங்கு பாதுகாப்புப் படைகளை அதிகரித்தது. இந்தியாவை போரில் வென்று காஷ்மீரை மீட்கமுடியாது என்பதைத் தெரிந்கொண்ட பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்து தாக்குதல்களை நடத்திவருகிறது. பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து முறியடித்துவருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .