2025 நவம்பர் 12, புதன்கிழமை

ID வழங்கும் பணியை விரைவுபடுத்தவும்: ஜனாதிபதி

Editorial   / 2025 நவம்பர் 12 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு  கூட்டம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), ஆட்பதிவுத் திணைக்களம் (DRP) மற்றும் GovTech (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் மேம்பாட்டுத் திட்டங்களின் எதிர்காலச் செயற்பாடுகளை ஆராய்வது, செயல்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் தடைகளை அடையாளம் காண்பது மற்றும் அந்த நோக்கத்திற்காக தேவையான கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகளை எடுப்பது போன்றவற்றை நோக்காகக் கொண்டு இந்தக் கூட்டம் நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மையக் காரணியாக உள்ள டிஜிட்டல் பொருளாதாரத்துடன் தொடர்புபட்ட அரச முதலீடுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பது அவசியம் என்று ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.

மேலும், நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கையாள்பவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. “கிராமத்துக்கு தொடர்பாடல்” திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அந்த திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் 500 கோபுரங்களை நிறுவும் இலக்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இலங்கைக்குத் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை(SLUDI) திட்டத்தை விரைவுபடுத்துதல், அமைச்சின் நிர்வாக மற்றும் செயற்பாட்டு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபையை நிறுவுதல் மற்றும் வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான மனித வளங்களை உருவாக்குதல் என்பன குறித்தும் இதன் போது  கவனம் செலுத்தப்பட்டது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X