2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

SDIG ’போலி சகோதரி’க்கு விளக்கமறியல்

Editorial   / 2025 நவம்பர் 02 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஒருவரின் சகோதரி எனத் தவறாகக் கூறி, கம்பஹா பகுதியில் போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய ஒரு பெண், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் நவம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டுகொட – உடுகம்போல பிரதேசத்தில் குறித்த பெண் இரு போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்திருந்தது.

பொலிஸார் வழங்கிய தகவலின்படி, காரை ஓட்டிச் சென்ற அப்பெண், ஆரம்பத்தில் போக்குவரத்து அதிகாரிகளின் நிறுத்துமாறு விடுத்த சமிக்ஞையை மதிக்காமல் சென்றுள்ளார். பின்னர், அவர் உடுகம்போல சந்தியில் வைத்து நிறுத்தப்பட்டபோது, அங்கேயே பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னரும் அவர் பொலிஸ் அறிவுறுத்தல்களை மீறிச் சென்றதால், இறுதியாக மினுவாங்கொடை பொலிஸ் சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.

போக்குவரத்து பொலிஸாருடன் அப்பெண் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது,  தான் யார்? தெரியுமா? தான்தான், ஒரு உயர் பொலிஸ் அதிகாரியின் சகோதரி என்று கூறினார். எனினும், அந்த பெண் கூறியது பொய் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டது.

சந்தேகநபரான அப்பெண் மீது, அபாயகரமான மற்றும் கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல், பொலிஸ் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியாமை, மற்றும் அரசு ஊழியரின் உத்தியோகபூர்வ கடமைக்கு இடையூறு விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் நவம்பர் 01 ஆம் திகதியன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை நவம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X