2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டிக்காது மத்திய அரசு வேடிக்கையே பார்க்கிறது

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்பாக கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள மறுமலர்ச்சி திராவிட ​முன்​​னேற்ற கழகத்தின் (ம.தி.மு.க)  பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகுமென தெரிவித்துள்ளார்.
 
  "இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில், கடந்த மார்ச் கடைசி வாரம் விசாரணைக்கு வந்தது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது என நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர். 

இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர்.

இதன் பின்னரும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்தனர், தலா 12 மீனவர்களென ஏப்ரல் 2, ஜூலை 1 ஆம் திகதிகளில், 24 பேரை கைது செய்தனர்.  ஜூலை 4 ஆம் திகதி 5 மீனவர்களை கைது செய்தனர் என சுட்டிக்காட்டிள்ளார். 
 
மத்திய பாரதிய ஜனதா கட்சி ( பா.ஜ.க) அரசு, இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து, கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கை சிறையில் அடைக்கும் இலங்கை அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எப்போது?" என்றும் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .