2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கள உத்தியோகஸ்தரின் கன்னத்தை பதம் பார்த்த கங்காணி

Editorial   / 2021 ஜூன் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களில், கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள் மீது, தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்​டே வருகின்றன.

இதனால், தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையில் மனக்கசப்பான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவமொன்று தலவாக்கலை- வட்டகொடை தோட்டத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

கள உத்தியோகஸ்தர் மீது, அத்தோட்டத்தைச் சேர்ந்த தலைவரொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து, கள உத்தியோகஸ்தர்களும் ஏனைய உத்தியோகஸ்தர்களும் இன்று (14) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னத்தில்  அறைவாங்கிய கள உத்தியோகஸ்தர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான அந்தக் கங்காணிக்கு எதிராக, தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைபாடுகளை ஏற்றதன் பின்னர், அக்கங்காணி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேயிலை மலைகளில் வருடத்துக்கு ஒருதடவை, நி​ரைகள் மாற்றப்படும். தோட்ட நிர்வாகத்தின் பணிப்பின் பேரிலும் ஒப்புதலின் அடிப்படையிலுமே அவ்வாறு செய்யப்படும், அதேபோல இம்முறையும் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் போது, குறிப்பிட்ட அந்த தோட்டத் தலைவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் வீதியோரங்களிலும் அல்லது கூடுதலாக கொழுந்துகளைப் பறிக்கக்கூடிய வகையிலான நி​ரைகள் கிடைக்கவில்லையென அறியமுடிகின்றது.

எனினும், நிரைகளைப் பிரித்துகொடுத்து, ஒருவாரம் கடந்துவிட்டது. அந்த ஒருவாரமும் சகலரும் எவ்விதமான பிரச்சினைகள் இன்றி, கொழுந்துகளைப் பறித்துள்ளனர்.

இந்நிலையிலேயே கடந்த 12ஆம் திகதியன்று, அந்த மலைக்கு பொறுப்பாகவிருந்த கள உத்தியோகஸ்தருடன், மேற்படி தோட்டத்தலைவர் தகராறு செய்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.

ஒருபக்க கா​துடன் சேர்த்து, கணீரெனச் சத்தம் கேட்கும் அளவுக்கு கன்னத்தில் அறைந்தமையால், கள உத்தியோகஸ்தர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி விவகாரம் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் மீதான தொழிலாளர்களின் அடாவடித்தனங்கள் குறித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் உதவித் தலைவர் இளையராஜா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .