2025 நவம்பர் 12, புதன்கிழமை

கிளிநொச்சியில் பொருத்தமற்ற குடிநீர் விநியோகம்

Janu   / 2025 நவம்பர் 12 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்திற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் பொருத்தமற்ற வகையில் காணப்படுகிறதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியின், பரவிப்பாஞ்சான், திருநகர். பரந்தன்,பூநகரி போன்ற பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீரானது சேற்று நீரின் நிறத்திலும் மணத்திலும் காணப்படுகின்றதாகவும் குடிநீர் உட்பட அனைத்து தேவைகளுக்கும் குழாய் வழி நீரை பயன்படுத்தும் மக்கள் இதனால் பெரிதும் சிரமப்படுவதாகவும்  கவலை  தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பொருத்தமற்ற வகையில் விநியோகிப்படுகின்ற நீர் தொடர்பாக ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக  தெரிவித்த  மக்கள்,  உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே  பொது மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபையை தொடர்பு கொண்டு வினவிய போது “ கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று புதிதாக  நவீன தொழிநுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் இரண்டாவது ஏற்கனவே காணப்படுகின்ற பாரம்பரிய முறையிலான  பழைய நீர் சுத்திகரிப்பு நிலையம். தற்போது பெய்த மழையுடன் கிளிநொச்சி குளத்தின் நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆதாவது அதிகளவு சேற்று நீர் குளத்தை வந்தடைந்தமையால் பழைய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக அவற்றை முழுமையாக சுத்திகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிளிநொச்சியின் ஒரு பகுதி பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீர் கலங்கிய நீராக காணப்படுகின்றது.  ஆனால் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற நீரில் இவ்வாறான நிலைமை ஏற்படுவதில்லை. 

இருப்பினும் கிளிநொச்சி முழுவதற்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நீரை விநியோகிப்பதற்கு  அதன் கொள்ளளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்த அவர்கள் தம்மால் விநியோகிக்கப்படுகின்ற நீரின் தரம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவே பொது மக்கள் அச்சமின்றி பயன்படுத்த முடியும். அத்தோடு  தற்காலிக ஏற்பாடாக கிளிநொச்சி முழுவதற்கும்  புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகம் மாற்றப்பட்டுள்ளது.

என்றும்  ஆனாலும் மக்களின் பாவனைக்கு ஏற்ப  முழுமையாக வழங்க முடியாத நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும்” எனவும் தெரிவித்தனர்.

தமிழ்ச்செல்வன் 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X