2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டயகம இடுகாட்டுக்கு பாடையில் வந்தவள் பத்திரமாய் பயணம் (முழு விவரம்)

Editorial   / 2021 ஜூலை 31 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதவான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?

 சோகத்தில் மூழ்கியது தோட்டம்

மூவரும் அடையாளம் காட்டினர்

நீதிமன்றுக்கு மீண்டும் அறிக்கை

‘உனக்கு நீதி கிடைக்கும் அதுவரை அழமாட்டேன்’

 ஆ.ரமேஸ், எஸ்.கணேசன், டி சந்ரு

கண்ணீர் மல்கி, தோட்டமே சோகத்தில் மூழக்கியிருக்க மத வழிபாட்டுகளுடன் அடக்கம் செய்யப்பட்ட 16 வயதான சிறுமி இஷாலின் ஜூட்டின் சடலம், பார்த்துகொண்டிருந்த அனைவரும் வாய்க்கட்டி மௌனித்திருக்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (30) தோண்டியெடுக்கப்பட்டது.

14 நாள்களுக்குப் பின்னர், தோண்டியெடுக்கப்பட்ட அச்சிறுமியின் சடலம், இரண்டாவது பிரேத பரிசோதனைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம் (30) கொண்டுச்செல்லப்பட்டது.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமைக்கு அமர்த்தப்பட்ட அச்சிறுமி, ஜூலை 3ஆம் திகதியன்று தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 16ஆம் திகதியன்று மரணமடைந்தார்.

முதலாவது பிரேத பரிசோதனையில், நீண்டநாள் பாலியல் துன்புறுத்தலுக்கு அச்சிறுமி உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டாரின் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலம், ஆகியவற்றால், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் மனைவி, மைத்துனர் மற்றும் மாமனார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுடன், டயகமவைச் சேர்ந்த தரகரும் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின் கீழ், அவர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனினும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவருடை பெற்றோர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுகளை செய்தனர்.

இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த 26ஆம் திகதியன்று கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அப்போது முறைபாட்டாளர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், சிறுமியின் சடலத்தை தோண்டியெடுத்து, இரண்டாவது பிரேத பரிசோ​தனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியைக் கோரியிருந்தார்.

அதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதுதொடர்பில், நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில், நேற்றுமுன்தினம் (29) அறிக்கையிடப்பட்டது. சடலத்தை தோண்டுவதற்கு நாளாக, நேற்றையதினத்தை (30) நுவரெலியான மாவட்ட நீதிமன்ற நீதவான்  லுசாகா குமாரி தர்மகீர்த்தி குறித்தார்.

சடலத்தை மீளவும் தோண்யெடுப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் அனுமதியளித்த அன்றைய தினத்திலிருந்து நேற்றுவரையிலும், சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருந்த டயகம தோட்ட மேற்கு பிரிவின் பொதுமயானத்துக்கு கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்தும், அச்சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது ​குறித்தும் செய்திகள் வெளியானதை அடுத்து, சிறுமிக்காக நீதிகோரி, பல்வேறு தளங்களிலும், பல மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் (30) தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியான நீதிமன்றத்தின் அனுமதியை அடுத்து, பொதுமயானத்துக்குச் செல்லும் குறுக்குபாதையும் அதனோடு இணைந்த பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டன. சவக்குழிக்கு மேல், தற்காலிக கூடாரமொன்று அமைக்கப்பட்டது. நீதிவானும், சட்டவைத்திய அதிகாரிகளும் இருப்பதற்கு மற்றுமொரு கூடாரமும் அமைக்கப்பட்டது.

கடுமையான சுகாதா​ர வழிகாட்டல்களுக்கு அமைய சடலத்தை தோண்டு நடவடிக்கைகள், நுவரெலியான மாவட்ட நீதிமன்ற நீதவான்  லுசாகா குமாரி தர்மகீர்த்தி நேற்றுக்காலை 8.50 க்கு ஆரம்பிக்கப்பட்டன. அங்குலம் அங்குலமாக ஆழப்படுத்தப்பட்டு, பகல் 12.20 மணியளவில், சவப்பெட்டி குழியிலிருந்து மேலேயே எடுக்கப்பட்டது.

சவப்பெட்டியை எவ்வாறு இரண்டு கயிறுகளைப் போட்டு குழிக்குள் இறக்கினார்களோ, அதேபோன்று, இரண்டு கயிறுகளைப் போட்டு அப்பெட்டியை குழிக்கு மேலே எடுத்தனர்.

ஒட்டியிருந்த மண் தட்டப்பட்டு, அந்த சவப்பெட்டி மேசையின் மேல் வைக்கப்பட்டது. அதற்குப்பின்னர்  புகைப்படங்களை எடுப்பதற்கான அனுமதி ஊடகவியலாளர்களுக்கும் மறுக்கப்பட்டது.

​பெட்டிக்கு அருகில் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான்  லுசாகா குமாரி தர்மகீர்த்தி சென்றார். சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரன் மூவரும் நீதவானுக்கு முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.

“சடலத்தை அடையாளம் காண்பதற்காக சவப்பெட்டியை திறப்பதில் எவ்விதமான ஆட்சேபனைகளும் இருக்கிறதா”? என நீதவான் வினவினார். அதற்கு அம்மூவரும் தலையை அசைத்தும், வாய்மூலமாகவும் “இல்லை” என பதிலளித்தனர்.

அதன்பின்னர், மிகவும் பாதுகாப்பாக சவப்பெட்டி திறக்கப்பட்டது. தன்னுடைய மகள் என தாயும், தந்தையும் அடையாளம் காண்பித்தனர். அத்துடன், தன்னுடைய சகோ​தரியென அச்சிறுமியின் சகோதரன் சடலத்தை அடையாளம் காட்டினார்.

அதன்பின்னர், சவப்பெட்டி இருந்தமாதிரியோ மூடப்பட்டது. வெள்ளை நிற பொலிதீனினால், முழுமையாக கட்டப்பட்டு, பாதுகாப்பு டேப்பகளும் ஒட்டப்பட்டன. அச்சடலத்தை ஏற்றிச்செல்வதற்காக வந்திருந்த மலர்சாலைக்குச் சொந்தமான பிர​த்தி​யேக வாகனத்தில் சவப்பெட்டி ஏற்றப்பட்டு, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து பேராதனை வைத்தியசாலை வரையிலும் பொலிஸாரின் போக்குவரத்து மோட்டார் சைக்கிள் முன்பாக பயணிக்க பொலிஸ் வாகனங்களுக்கு இடையில் சடலத்தை ஏற்றியிருந்த மலர்சாலை வாகனம் பயணித்தது.

சடலத்தை மீளத் தோண்டி எடுக்கப்படுகின்றது என்ற செய்தியை கேட்டவுடன் அத்தோட்டமே மீண்டும் சோகமயமானது. அந்த தோட்டத்தை சேர்ந்த பலரும். அருகிலிருந்த தோட்டங்களிலிருந்து வருகைதந்தவர்களும் மயானத்துக்கு அணிதாக இருக்கும் தேயிலை மலைச் செடிகளுக்கு இடையிலிருந்து ​வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.

சவப்பெட்டி மே​லே எடுக்கப்பட்டபோது, தந்தையும் சகோதரும் ​கண்ணீர் சிந்திவிட்டனர், கதறிகூட அழமுடியாத நிலையிலிருந்த அச்சிறுமியின் தாய், “உனக்கு நீதி கிடைக்கும். அதுவரை அழமாட்டேன்”  என தமிழிலும், சிங்களத்திலும் ஆக்ரோசமாக கத்தினார். எனினும், அங்கிருந்தவர்கள் தாயை அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

பேராதனை போதனா வைத்தியசாலையில், நிபுணர்களின் முன்னிலையில் இரண்டாவது பிரேத பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர், அதன் அறிக்கை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்   சமர்ப்பிக்கப்படும்.

இந்நிலையில், கொழம்பு மேலதிக நீதவான் ரஜீந்ரா ஜயசூரியவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுவரும் மேற்படி விவகாரம் தொடர்பிலான வழக்கு, ஓகஸ்ட் 9ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X