2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவாரா ஹூல்?

ஆர்.மகேஸ்வரி   / 2020 மே 21 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் ஆணைக்குழுவுக்குச் செல்லாவிட்டால் அங்கு கூட்டங்களை நடத்த முடியாது என்றும் எனவே, மாறுப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் தான் ஆணைக்குழுவுக்குச் செல்வதில் பலருக்கு விருப்பமில்லை என்பதாலேயே, தன்னை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, தேர்தல் ​ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.

அவர் தனது மகளுடன், தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று முன்தினம் (19) சென்றபோது, அங்கிருந்தவர்களின் எதிர்ப்பால் வெளியேறியமைத் தொடர்பில் வினவியபோதே, தமிழ்மிரருக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தனது மகள் ​இந்த மாதம் 4ஆம் திகதி, இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்தார் என்றும் 18ஆம் திகதி வரை, நீர்கொழும்பு- ஜெட்விங் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் நிறைவு ​செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எனவே தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் தனது மகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று (20) தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் இருந்ததால், யாழ்ப்பாணத்துக்குச் செல்ல முடியாது என்பதால், மகளையும் அழைத்துக்கொண்டு, நேற்று முன்தினம் (19) அலுவலகத்துக்குச் சென்ற போது, தனது மகள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யாமல் சென்றிருப்பதாக தகவல் பரப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆணைக்குழுவின் தவிசாளர் தன்னையும் தனது சாரதியையும் தனிமைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததையடுத்து, தான் அன்றே யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தகுந்த ஆவணங்கள் இருந்தும் மகளுடன் தான் தனது அலுவலக நடவடிக்கைக்காக, தேர்தல் ​ஆணைக்குழுவுக்குச் ​சென்றபோது, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பை தெரிவித்ததாகவும், இதனால் தான் அங்கிருந்து வெளியேறிதாகத் தெரிவித்த அவர், ஒருநாளும் இல்லாத வகையில் எதிர்பார்க்காத பல இடங்களில் தனது வாகனம் இடைமறிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனது காரின் வாகன இலக்கத்துடன் எல்லா இடங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான எழுத்துமூல ஆவணத்தைப் காண்பித்தே வாகனத்தை மறித்து பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதுவரை ஒருநாளும் இவ்வாறு தான் வழியில் சோதனைக்கு உட்படுப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் நேற்று அதிகாலை (20) யாழ்ப்பாணத்திலுள்ள தனது வீட்டுக்கு வந்த பொலிஸார், தன்னை தனிமைப்படுத்த முயற்சித்தனர் என்றும் எனினும் சுகாதார வைத்திய அதிகாரி தன்னை தனிமைப்படுத்த அவசியமில்லை என்றும் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய சாரதியையும் அழைத்து, தான் சென்று வந்த விடயங்கழளை விசாரித்தனர் என்றும் சாரதியிடம் வினவிய விடயங்களை தன்னிடம் கேட்டிருந்தால் தான் பதிலளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X