2025 ஜூலை 19, சனிக்கிழமை

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான அதிர்ச்சி செய்திகள்

Freelancer   / 2025 ஜூலை 19 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை  நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு முன்பாக கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்டிருந்த இலக்கத் தகடு ஒரு காருக்கு பதிவு செய்யப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கொழும்பு கைரேகைத் துறையைச் சேர்ந்த அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில் வெள்ளவத்தையைச் சேர்ந்த 46 வயதுடைய சுதத் குமார் காயமடைந்த நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

சிசிடிவி காட்சிகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எந்த இடையூறும் இல்லாமல் நடந்து சென்று, காரின் சாரதி இருக்கையில் இருந்த சுதத் குமார் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டார். 

இதில் இரண்டு குண்டுகள் அவரது தோள்பட்டை மற்றும் வயிற்றில் பட்டன. மற்றவை காரைத் தாக்கின. தாக்குதலுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். 

சம்பவ இடத்திற்கு வந்த ஒருவர், காயமடைந்த சுதத் குமாரை அதே காரில் ஏற்றி களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்தார். சுதத் குமார் நாளாந்த கடன் வழங்குபவர் எனவும், அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை எனவும், யாராலும் அச்சுறுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

விசாரணையில், சுதத் குமார், "வெலே சுதா" என்று அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உறவினரை மணந்து, சமீபத்தில் விவாகரத்து செய்தவர் எனத் தெரியவந்துள்ளது. 

மேலும், அவர் படோவிட்ட அசங்கவின் நெருங்கிய உறவினர் எனவும், கொஸ் மல்லியின் தரப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராத ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X