2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

’பாதுகாப்பான வாழ்க்கையைபெற்றுக் கொடுப்பதே நோக்கம்’

Freelancer   / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு  பிரஜைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், மக்களை மீள்குடியேற்றும்போது முறையான மேற்பார்வையுடன் செயல்படுவது அனைவரின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக  இந்த வருடத்தில் அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அனைத்து  மறுசீரமைப்புகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் அந்த நிதி  ஒதுக்கீடுகளை மீளத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அன்றாட இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் தேவையான நிதி  ஒதுக்கீடுகளில் எந்தப் பற்றாக்குறையும் கிடையாது என்றும்  இந்த அவசரகால நிலையில்  வரம்புகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து நிறுவனங்களும் தங்கள் பொறுப்புகளை நன்கு ஒருங்கிணைந்து  நிறைவேற்றுவதே அவசியமானது எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்தில் இயல்பு  நிலையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காகவும் நேற்று  ஊவா மாகாண நுலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் 19,133 குடும்பங்களைச் சேர்ந்த 64,140 பேர் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 7,703 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வீதிகளை மீளமைப்பது, மின்சாரம், நீர் வழங்கல், தகவல் தொடர்பு, நீர்ப்பாசனம் மற்றும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்புவது  மற்றும் விவசாயம், கால்நடைத் துறை, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், கல்வி போன்ற துறைகளை  மீண்டும் ஆரம்பிப்பது  குறித்து ஜனாதிபதி  தனித்தனியாக கேட்டறிந்தார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)

\


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X