2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

பேராதனைப் பல்கலைக்கழகத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவு

Editorial   / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்தினுள் 2025 நவம்பர் 27ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகளைச் சந்திப்பதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு அவர் டிசம்பர் 07ஆம் திகதி விஜயம் செய்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விஜயமானது, கல்விசார் கட்டடங்கள், மாணவர் வசதிகள் மற்றும் பிரதான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களை நேரடியாகப் பார்வையிடுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன் போது, முகாமைத்துவம், விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பீடங்கள், தகவல் தொழில்நுட்ப நிலையம், CDCE, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளை எடுத்துக்கூறி, பாதிப்பின் தீவிரத்தன்மை குறித்துப் பல்கலைக்கழக அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

இந்தப் பேரழிவினால் கல்விச் செயற்பாடுகளுக்கும், மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய விதம் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 110 இற்கும் அதிகமான கணினிகள், அத்தியாவசியமான ஆய்வுகூட உபகரணங்கள், பரீட்சை ஆவணங்கள் மற்றும் நான்கு பிரதான தகவல் தொழில்நுட்ப வழங்கிகள் (Server) ஆகியன அழிவடைந்துள்ளதாகவும், ஆரம்பச் சேத மதிப்பீடு 6 பில்லியன் ரூபாயை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனர்த்தத்தை அடுத்து மகாவலி ஆற்றங்கரையில் அமைந்திருந்த விடுதிகளில் இருந்து சுமார் 750 மாணவர்களை விரைவாக வெளியேற்றியமைக்காகப் பிரதமர் பாராட்டினைத் தெரிவித்தார். அத்துடன், நெருக்கடி காலத்தில் வளாகத்தில் தங்கியிருந்த சுமார் 11,000 மாணவர்கள் வெளிப்படுத்திய மன உறுதியையும் அவர் பாராட்டினார். அணுகல் மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகத் தடைப்பட்டிருந்த போதிலும், உணவு, நீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுத்தமைக்காக இலங்கை இராணுவம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் உள்ளூர் நன்கொடையாளர்களுக்கும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

கூட்டுப் பொறியியற் குழுவின் அறிக்கையின்படி, வெள்ளத்தால் சூழப்பட்ட பல்கலைக்கழகக் கட்டடங்கள் கட்டமைப்பு ரீதியாக உறுதியான நிலையில் இருக்கின்றன. ஆயினும், பல கட்டடங்களுக்கு அவசர திருத்தங்கள் தேவைப்படுகின்றன. டிசெம்பர் 15ஆம் திகதி வரை கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இயல்பு நிலையை மீட்டெடுப்பது குறித்தும், கல்வி மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்துத் துணைவேந்தர் மற்றும் அவசர நடவடிக்கைகளுக்கான குழுக்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X