2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘ரட்ணஜீவன் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் வெட்கம் கெட்டது’

Editorial   / 2020 மே 21 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன்  ஹூலை அரசாங்கம் குறிவைத்து அழுத்தங்கொடுப்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், அரசாங்கத்தின் இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனோவால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் எங்களது ஆட்சியிலேயே தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக்கப்பட்டது.  அதன் முக்கியத்துவத்தை நாடு இன்று உணர்கிறது. தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நடுநிலையாகச் செயற்படுகிறார்கள்.

இந்தப் பின்னணியில் நாட்டின் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இச்சுயாதீன செயற்பாட்டில் தீவிர முன்முயற்சியுடன், செயற்படும்  தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன்  ஹூலை தற்போதைய அரசாங்கம் குறிவைத்து அழுத்தம் செலுத்த முயல்கிறது.

அரசியல் கட்சிகளின் தேவைக்காக செயற்படுகிறார் என்றும், அவர் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் மீது பழி தீர்க்க முயல்வதாக நாம் கருதுகிறோம்.

தாம் இழுத்த இழுப்புக்கு அவர் உடன்படவில்லை என்ற காரணத்தால், நீண்ட காலமாகவே அவர் மீது அரசாங்க அமைச்சர்கள் காட்டாமாக உள்ளார்கள். இது இன்று அதிகரித்துள்ளது. இந்த வெட்கம் கெட்ட செயலை உடன் தலையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் பலம்பெற்று இருந்த காலத்தில் கூட அவர் துணிச்சலுடன் தனது கருத்துகளை முன்வைக்கத் தவறவில்லை. இன்று அவர் எந்தவொரு கட்சிக்கும் சார்பாக செயற்படவில்லை.

 

ஹூலின் மகள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு,  ரட்ணஜீவன்  ஹூலின் மீது புதிய அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  சென்ற பயணத்தில் வீதி தடைகளில் அவருக்கு தொல்லை தரப்பட்டுள்ளது.

அவரையும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி முடக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிகிறது. இவை சிறுபிள்ளைத்தனமான செயல்களாகும். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளை பார்த்து ஏற்கனவே நாடும், உலகும் சிரிக்க தொடங்கி விட்டன. மேலும் நகைப்புக்குள்ளாக வேண்டாம் என அரசாங்கத்துக்கு கூறி வைக்க விரும்புகிறேன்.” எனவும் அந்த​ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X