2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’வாடகை அறவிடுவதில் மனிதாபிமானம் தேவை’

ஆர்.மகேஸ்வரி   / 2020 மே 07 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மகேஸ்வரி விஜயனந்தன்

கொழும்பில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீடுகளின் உரிமையாளர்கள், வாடகை அறவீட்டில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வெண்டுமென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் மனிதாபிமானக் கோரிக்கைகள் முன்வைக்க வேண்டுமெனத் தான் முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதெனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில், தமிழ்மிரருக்கு அமைச்சர் கூறியதாவது,

“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்துத் தரப்பினரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், கல்வி, தொழில் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்காக, கொழும்பில் வாடகை வீடுகளிலும் அறைகளிலும் தங்கியுள்ள பெரும்பாலானவர்கள், தங்களுடைய தங்குமிடத்துக்கான வாடகையைச் செலுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

“ஆனால், வீடுகளையும் அறைகளையும் வாடகைக்குக் கொடுத்து அதன்மூலம் ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தியவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

“அதனால், வாடகைக் கட்டணத்தைக் குறைத்தல் அல்லது அதைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குதல் போன்ற மனிதாபிமான நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கோரி, அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் பிரதமரும் ஜனாதிபதியும் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தனர்” என்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஊடகங்களில் செய்தி வௌியிட்டு, மக்களைப் பீதிக்குள் வைத்திருப்பதிலும் பார்க்க, தற்போது சிகிச்சை பெறுகின்றவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதே சிறந்ததாக இருக்குமெனலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X