Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 11 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடரங்குச் சட்டத்தைப் பிறப்பித்து நாட்டை 'ஷட் டவுன்' பண்ணுவதாகக் கூறினாலும், உலகில் எந்தவொரு நாட்டையும் முழுமையாக 'ஷட் டவுன்' பண்ண முடியாதெனத் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மக்களில் அதிகமானோர் வீடுகளில் இருக்கும்போது, மேலும் பல மில்லியன் பேர் மக்களுக்காக வேலை செய்யவேண்டி ஏற்படுகிறதென்றார்.
நாட்டின் இயல்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறிய அவர், கொரோனா வைரஸ் பரவல், இந்நாட்டிலிருந்து முழுமையாக மறைந்து போகவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவிற்கொள்ள வேண்டுமென்றார்.
இது தொடர்பில், நேற்றைய தினம் (10) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தற்போது கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலகளவில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. இது வரைக்கும் இங்கிலாந்தில் வசித்த 25 இலங்கையர்கள் கொரோனா நோயால் மரணமடைந்துள்ள போதிலும், இந்த நோய் காரணமாக இலங்கையிலுள்ள இலங்கையர்கள் ஒன்பது பேர் மாத்திரமே மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
“2019 நவம்பர் 16ஆம் திகதியன்று, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படாவிடின், இந்த எந்தவொரு வெற்றியும் மக்களுக்குக் கிடைத்திருக்க மாட்டாது என்பதையும் கூறவேண்டும்.
“கொரோனா வைரஸ் நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளமையால், தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்ட நாட்களில்கூட, சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், பொலிசார், நெல் விவசாயிகள், மரக்கறி விவசாயிகள், மீனவர்கள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிப்போர் மற்றும் சில தொழிற்சாலைகள்கூட வழமைபோன்று செயற்பட்டன. ஆரம்பம் முதல் காணப்பட்ட நிலைமையைப் படிப்படியாக ஏற்படுத்துவதே நாட்டை இயல்பு நிலைக்கு மாற்றுதல் என்பதன் மூலம் கருதப்படுகிறது.
“அரச துறையிலும் தனியார்த் துறையிலும் முதலில் சிறியளவான ஊழியர்களைப் பணியிடங்களுக்கு அழைத்து, பஸ்களிலும் ரயில்களிலும், ஒரு தடவையில் பயணிக்க முடியுமான பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, பாடசாலைகள், மேலதிக வகுப்புகளைத் தொடர்ந்தும் மூடி வைத்து, முடியுமானளவு சமூக இடைவெளியைப் பேணிச் செல்வதுடன், நாட்டின் இயல்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தப்படவுள்ளது.
“அதனால், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்பும் சிந்தித்து நடந்துகொள்வது அத்தியாவசியமானதாகும். கொரோனா வைரஸ் ஆபத்து கட்டுப்படுத்தப்பட்டு இருப்பினும், அது முழுமையாக மறைந்து போகவில்லை என்பதை நாம் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.
“நோயாளர்களைக் கண்டறிவதற்காக மக்கள் மத்தியில் மாதிரிப் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்கள் தொடர்ந்தும் நடத்தப்படும். எதிர்காலத்திலும் கொரோனா வைரஸ் தொற்றுடைய நோயாளிகள் கண்டறியப்படலாம். எனினும், அவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை எமது சுகாதாரப் பிரிவினர் மேம்படுத்தியுள்ளனர் என நம்புகிறேன்.
“எதிர்காலத்திலும் முன்னர் போன்று சில பிரதேசங்களைத் தனிமைப்படுத்தல், பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தல் நடவடிக்கைகள் தேவைப்படலாம். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் முடியுமான எல்லா இடங்களிலும் இயல்பு வாழ்வை மீள ஆரம்பித்தல் ஆகிய இரண்டையும் சமநிலையில் பேணவேண்டும்.
“இலங்கையில் மாத்திரமன்றி கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் மரணித்த இத்தாலி, பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள்கூட இச்சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்வை மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளன.
“கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரப் பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய அதே ஒத்துழைப்பை, நாட்டை இயல்பு நிலைக்கு மாற்றும் செயற்பாட்டிலும் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என, பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago