2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசியலில் ஸ்திரத்தன்மை உருவாகாவிடின் அராஜக நிலையை தவிர்க்க முடியாது’

Freelancer   / 2022 மே 12 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.யசி

நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை கையாள முயற்சித்துக்கொண்டுள்ள நிலையில் நாட்டல் வன்முறைகளும் அராஜகத்தன்மையும் உருவாகின்றதென்றால் அதனை  கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவோ அல்லது மீளவோ முடியாது. 

ஜனநாயக ரீதியில் அரசியல் அமைப்பிற்கு அமைய கூடிய விரைவில்  அரசியல் ஸ்திரத்ததன்மையை  உருவாக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் நாட்டு இன்னமும் மோசமான அராஜக நிலைக்கு செல்வதை தவிர்க்க முடியாது என  மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

இலங்கை மத்திய வங்கியினால் நேற்று(11) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

பொருளாதார ரீதியில் ஏற்கனவே நாடு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில்,  கடந்த திங்கட்கிழமை நாட்டில் ஏற்பட்ட குழப்பக்கர நிலைமையானது வேறுவிதமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதுவரை காலமாக கடினமான முறையிலேனும் நாம் தக்கவைத்துக்கொண்டு பயணித்த தரத்தின் திசை மாறியுள்ளது. நாட்டின் சட்டம் ஒழுங்கை முறையாக கொண்டுசெல்ல முடியாத நிலைமையானது பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. வெவ்வேறு குழுக்கள் சட்டத்தை கையில் எடுப்பதும், சட்டத்தை கையில் எடுக்க வேண்டிய தரப்பு வேடிக்கை பார்ப்பதுவும் ஆரோக்கியமானதல்ல. அதுமட்டுமல்ல அவ்வாறான சூழல் நிலவும் எந்தவொரு நாட்டினாலும் அந்நாட்டின் பொருளாதாரத்தை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர முடியாது. 

அதேபோல் நாட்டின்  பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசியல்  ஸ்திரத்ததன்மை மிக அவசியமாகவும். நாம் பணிகளை ஆரம்பித்த நேரத்தில், குறுகிய காலப்பகுதிக்குள் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கும் அதன் மூலமாக குவிரைவாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றே நினைத்தோம். ஆனால் இன்று நிலைமையை பார்த்தால், நாட்டில்  பிரதமர், நிதி அமைச்சர் இல்லாது, பாராளுமன்றம் முறையாக செயற்படாது வெறுமனே நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரை வைத்துக்கொண்டு நகரும் நிலைமையே காணப்படுகின்றது. சகல அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு விதத்தில் ஸ்திரமான அரசாங்கம் மற்றும் நிருவாக முறையை உருவாக்கி, நாட்டின் சட்டம் ஒழுங்கை உருவாக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதையே நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் பிரதான நிறுவனமாக எம்மால் வலியுறுத்த முடியும். 

நாடு மேலும் அராஜக நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்க மிக விரைவில் அரசியல் தீர்வொன்று அவசியம். நாட்டில் அராஜக நிலைமைகள் நிலவுகின்ற நிலையில் மத்திய வங்கி எவ்வாறான முயற்சிகளை கையாண்டாலும் அது வெற்றியளிக்காது. இப்போதும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, கடன் மீள் கட்டமைப்பு குறித்தும் பல்வேறு தரப்புடன் பேசிவருகின்றோம் . 

இவற்றின் அடிப்படை தீர்மானங்களை எட்டுவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும் நிலையில் குறைந்தது மூன்று தொடக்கம் ஆறு மாதகாலமேனும் தேவைப்படும் . ஆகவே அவ்வாறான நிலையொன்றை அடைவதற்கு அரசாங்கம் செயற்பாட்டில் இருக்க வேண்டும். தேர்தல் ஒன்றுக்கு நாம் செல்வதென்றால் மீண்டும் சில மாதங்கள் பிற்போக்கு. இன்றுள்ள நிலையில் நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பிற்போட முடியாது. அவ்வாறு செல்லும் வேளையில் மேலும் நெருக்கடிக்குள் வீழ்வோம். ஆனால் எந்த வழிமுறையிலேனும் முதலில் உறுதியான அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். 

சர்வதேச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வேளையில் பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன்  இப்போது நாம் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்ற போதிலும் அது தொழிநுட்ப  மட்டத்திலான  பேச்சுவார்தைகளாக அமைந்துள்ளது, அடுத்ததாக கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கமே பிரதான வகிபாகத்தை கொண்டுள்ளது. அதன்போது அரசின் முக்கிய சில நிறுவனங்கள் இயங்கியாக வேண்டும். . ஜனாதிபதி உள்ளிட்ட சகல அரசியல் தலைவர்களும் நிலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையேல் சகலரும் பொறுப்பு கூறியாக வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .