2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’ஒரு முகாம்கூட அகற்றப்படாது’

J.A. George   / 2019 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே படையினர் செயற்படுகின்றனர் என்றும் கூறிய அவர், தற்போதுள்ள முகாம்களை விட்டு இராணுவத்தினரையோ முப்படையினரையோ வெளியேற்றவோ இடமாற்றம் செய்யவோ முடியாது என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் பார்த்து, காலத்தின் தேவைக்கு ஏற்பவே அதுபற்றி எதிர்காலத்தில் தீர்மானிப்பதாகவும் கூறினார்.

கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில், நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் உள்ள அனைத்தின மக்களையும், தான் சமமான முறையிலேயே பார்ப்பதாகவும் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை என்றும் “நான், ஓரினத்தின் இராணுவ தளபதி இல்லை. அனைத்தின மக்களும் வாழும் நாட்டுக்கே நான் தான் இராணுவத் தளபதி” என்றும் கூறினார்.

தனது நியமனம் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச தரப்பினர்  தமது கருத்துகளை முன்வைக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எனினும், நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதற்கு பொறுத்தமானவர் என்ற ரீதியில், நான் தேவை என்பதன் காரணமாகவே முப்படைகளில் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு   இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்றும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு,  தான் அதை ஏற்றுக்கொண்டதாகவும் இந்த நாட்டையும் அனைத்து மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதென்றும் அவர் கூறினார்.

“எனது நியமனம் தொடர்பில், பலரும் அவர்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதற்றடவை அல்ல.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலும் முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள், அனுமானங்களை முன்வைத்தார்கள். இறுதியில் அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்த்துப் போயின. அதைப் போலவே, இப்போது என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் வரும் போகும்.

“நான் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் காலத்தில், நாட்டின் புலனாய்வுத் துறையை விருத்திசெய்து வலுப்படுத்த, முன்னின்றுச் செயற்படுவேன். இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு, புலனாய்வுப் பிரிவினர் சக்திவாய்ந்தவர்களாகக் காணப்படுவது அவசியம்.

புலனாய்வுத் தகவல்களைக் கொண்டே, எமது படையினரை நாங்கள் பணிகளில் ஈடுபடுத்த முடியும். அவ்வாறான புலனாய்வுப் பிரிவை மேலும் வலுப்படுத்தி, உலகில் சிறந்த புலனாய்வுத் துறையைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

இதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துக்குத் தேவையான தகவல்களை நீதிமன்றம் கோரினால், இராணுவத்தினரிடம் உள்ள தகவல்களை வழங்குவதற்கு, ஒருபோதும் பின்னிற்பதில்லை என்றும், இராணுவத் தளபதி மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X