2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இலங்கை இராணுவம் கொடூரமானது’

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

இலங்கை இராணுவத்தினர் தன்னுடைய நாட்டு மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு கொடூரமானர்கள் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு - ஒதியமலைப் படுகொலையின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (02) இடம்பெற்றன. அந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை, ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்ட 32 அப்பாவித் தமிழர்களுடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும் எனவும் அவர் பிராத்தித்ததுடன், இப்படியான கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இந்த ஒதியமலைப் பகுதியிலே இடம்பெற்ற ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு எமது அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த ஒதியமலைப்படுகொலை தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது, இராணுவ உடை தரித்த இனந்தெரியாதோர் இந்த கொலைகளைச் செய்த்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நாட்டிலே தன்னுடைய மக்களையே கொலைசெய்யும் அளவிற்கு, கொடூரமான  இராணுவம் இருந்ததெனில் அது இலங்கயில்தான் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

குறிப்பாக கடந்த 1984.12.02அன்று அதிகாலை இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்களை வீடுவீடாகச் சென்று, பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துவந்து 27பேரை ஈவிரக்கமின்றி படுகொலைசெய்தது மாத்திரமின்றி, மிகுதி ஐந்து பேரை வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று அவர்களையும் மிக மோசமான முறையில் படுகொலைசெய்துள்ளார்கள்.

இவ்வாறான மிக மோசமான பல செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது சர்வதேசம் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றது என்பதே எனது கேள்வியாகும்.

கடந்த காலங்களிலிருந்தே எமது தமிழ் மக்கள்மீது மிகமோசமான கொடுமைகளையும், சித்திரவதைகளையும் இந்த நாட்டுபடையினர் மேற்கொண்டுவருகின்றனர் என்பது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வருகின்றது.

இந்த படுகொலைச்சம்பவத்தைப் போன்று, பல படுகொலைச் சம்பவங்களையும், பல துன்பியலான சம்பவங்களையும் எமது தமிழ் மக்கள் கண்டிருக்கின்றனர்.

இவ்வாறான துன்பியல் மிக்க சம்பவங்களை முடிவுக்குக்கொண்டுவருமாறுதான் எங்களுடையவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்கி, தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிசெய்யுமாறுதான் கேட்கின்றோம்.

மேலும் இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட 32பேருடைய ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டும். இப்படியான கொடூரங்கள் இனியும் இந்த நாட்டிலே நடக்காமல் தமிழர்களாகிய நாம் நின்மதியாக வாழ வழி ஏற்படவேண்டும்- என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .