2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

2021 இல் இலங்கை எதிர்கொள்ளவுள்ள பொருளாதார சவால்கள்

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச. சேகர்

அடுத்த வரவு-செலவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கத்தால் கடந்த வாரம் நிதியொதுக்கீட்டுச் சட்டமூலம் வெளியிடப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டில், இலங்கை வரவு-செலவுத் திட்டத்தைக் கொண்டிராத நிலையில், 2021ஆம் ஆண்டில், அரசாங்கம் பெருமளவு கடன் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பில், பலர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு முன்னுரிமையான கொள்கைகளை வகுக்க, இது உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களுக்கு மீள உறுதிப்படுத்தலை வழங்குவதாகவும் இருக்கும். 

முன்னைய அரசாங்கத்தால், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கடன் பெறல் நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியுள்ளதுடன், வரவு-செலவுத் திட்டம், காலம் ஆகியன எந்தவகையில் அமைந்திருக்கும் என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது.  

மொத்தத் தேசிய உற்பத்தி - கடன் விகிதம் என்பது 86% ஆக அமைந்துள்ளதுடன், அடுத்த ஆண்டில் இது 100% ஆக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன. 

முதலீட்டாளர்களின் ஐயப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு, வரவு-செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை, அடுத்த இரு வருடங்களில் பெருமளவில் சீராக்கிக் கொள்ள வேண்டிய தேவையையும் இலங்கை கொண்டுள்ளது. இவற்றுடன், வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்களவு வரி,  இதர சீர்திருத்தங்கள் போன்றனவும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.  

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர், உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக, அரசாங்கம் பெருமளவு தொகையைக் கடனாகப் பெற்றிருந்தது. ஆனாலும், முதலீடுகளை ஊக்குவிக்க முடியாமல் போனதுடன், ஏற்றுமதியை விஸ்தரிக்கவும் தவறியிருந்தது. 

இந்த ஆண்டில், கடன் மீளச் செலுத்தல்களை நிவர்த்தி செய்ய முடிந்த போதிலும், தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவலுடனான சூழலில் முன்னேற்றம் ஏற்படாவிடின், 2021ஆம் ஆண்டில் செலுத்த வேண்டியுள்ள கடன் தொகைகளைச் செலுத்துவது  சவால்கள் நிறைந்ததாக அமைந்திருக்கும். அத்துடன், இலங்கை ரூபாயின் பெறுமதியை, தற்போதைய மட்டத்தில் தொடர்ந்து பேணுவதும் சவாலான விடயமாக இருக்கும்.  

2023ஆம் ஆண்டு வரையில், 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை, அரசாங்கம் மீளச் செலுத்த வேண்டியுள்ளது. இதைச் செலுத்துவதற்கு, மேலும் கடன் பெற வேண்டிய சூழல் தற்போது காணப்படுகின்றது. இவ்வாறு கடனுக்கு மேல் கடனுடனும் குறைந்த வளர்ச்சியுடனும் காணப்படும் இலங்கையின் பொருளாதாரம், தொடர்ச்சியாகப் பெருமளவு சவால்களுக்கு முகங்கொடுப்பதாகவே அமைந்திருக்கும். 

ஆனாலும், இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்; சுனாமியின் பேரழிவில் இருந்து மீண்டனர்; யுத்தத்திலிருந்து மீண்டனர்; அரசியல் ஸ்திரமற்ற நிலையிலிருந்து மீண்டனர்; பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து மீண்டனர். கொரோனா வைரஸ் பரவலின் முதல் சுற்றிலிருந்து மீண்ட போது, தற்போது மீண்டும் ஓர் அடி.   

கடன்களை மீளச் செலுத்துவதற்கு, நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள, சர்வதேச உதவியை நாடலாம்; ஆனாலும், அது குறுங்காலத் தீர்வாக மாத்திரமே அமைந்திருக்கும். பொருளாதாரத்தை மாற்றியமைப்பது தொடர்பில், அரசாங்கம் அதிகளவு கவனத்தைக் கொண்டிருக்குமாயின், கடினமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறான கடுமையான திட்டங்களை அமுல்படுத்த, கடந்த அரசாங்கங்கள் தவறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில், 15% பொதுத்துறை வருமானம் வளர்ச்சியடைய வேண்டும். அதனூடாகக் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, இதர நலன்புரி உதவிகளை வழங்கக்கூடியதாக இருக்கும். மொத்தச் சனத்தொகையில், 40%க்கும் அதிகமானவர்கள், இதை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். வரிகளின்றி, இந்த வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கு, மாற்று வழிகள் இல்லை.  

மற்றுமொரு கடினமானதும்  முக்கியமானதுமான படியாக, அரச உரிமையாண்மை நிறுவனங்களை மீளமைப்புச் செய்வதாகும். அரச நிறுவனங்களின் நட்டங்களை, ஈடுசெய்வதற்காகத் தொடர்ந்தும் அரசாங்கம் நிதி வழங்க முடியாது. மாறாக, அரச துறை நிறுவனங்களைக் குறைப்பதும் சாத்தியமற்றது. 

ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர், யுத்தம் நிறைவடைந்த போதிலும், பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. இதை மறுசீரமைப்புச் செய்து, ஏனைய துறைகளின் செலவீனங்களுக்கு ஈடுசெய்வது தொடர்பில் கவனம் செலுத்தலாம். இந்த விடயத்துடன் பெருமளவு தொடர்புடைய, மோசடிக்கு எதிரான போராட்டம்,  வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் போன்றவற்றை, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளன.  

வியாபாரத்தை முன்னெடுக்கும் சுட்டெண்ணில் குறைந்த மட்டத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை, பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர் மூலப்பொருள் செலவீனம், காணி கையகப்படுத்தலில் உயர் செலவீனம், கடுமையான ஊழியர் சட்டங்கள், அரசாங்க விதிமுறைகள் போன்றன, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்வதில் பிரதான தடைகளாக அமைந்துள்ளன.

இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படுவதுடன், ஏற்றுமதியை விஸ்தரித்து, அதனூடாகப் பெற்றுக் கொள்ளும் நிதியைக் கொண்டு, கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். மாறாகக் கடன் பெறலில் தங்கியிருக்கக்கூடாது. 

தற்போது உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உலக நாடுகளின் உதவிகள் கிடைப்பது மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருக்கும். எனவே, பொறுப்பான வகையில், மறுசீரமைப்புகளை மேற்கொள்வது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

உள்நாட்டுத் தொழிற்றுறைகளை ஊக்குவிப்பது வரவேற்கத்தக்க விடயமாக அமைந்திருந்த போதிலும், பரந்தளவு கொள்கைகளினூடாக அது மேற்கொள்ளப்பட வேண்டும்.அத்துடன், சர்வதேச சந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருக்க வேண்டும். 

அவ்வாறான நிலையில் மாத்திரம், இலங்கையின் பொருளாதாரம் நிலைபோறான வழியில் அமைந்திருக்கும் என்பதுடன், இலங்கையின் கடன் நெருக்கடிக்கும் தீர்வை நாடக்கூடியதாக இருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .