2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ், பான் ஏசியா வங்கியுடன் பங்காண்மை

S.Sekar   / 2022 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, பான் ஏசியா வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இந்தக் கைகோர்ப்பினூடாக, நாட்டில் பாங்கசூரன்ஸ் சேவையை மேலும் விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இலங்கையின் நுகர்வோருக்கு தொடர்ச்சியாக புரட்சிகரமான வங்கியியல் வாடிக்கையாளர் தீர்வுகளை பான் ஏசியா வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, சிறந்த காப்புறுதித் தீர்வுகள் வழங்கப்படும் என்பதுடன், இவற்றில் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் முதலீடு போன்றவற்றுடன், பரிபூரண நிதித் தீர்வுகள் அடங்கியிருக்கும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பங்காண்மை மிகவும் முக்கியமானது. இலங்கையில் பாங்கசூரன்ஸ் பிரசன்னத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கும். பான் ஏசியா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு புதிய தலைமுறை காப்புறுதி அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க இந்த பங்காண்மை உதவியாக அமைந்திருக்கும். பான் ஏசியா வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த தந்திரோபாய பங்காண்மையினூடாக பரஸ்பர அனுகூலத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழிகோலப்படும் என்பதுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சியை எய்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

ஜுட் கோம்ஸ் மேலும் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வரும் பிரிவு என்பதுடன், ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. சேவைச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தலைமைத்துவம் போன்றவற்றைக் கொண்ட பாங்கசூரன்ஸ் ஊடாக, பாதுகாப்பு இடைவெளியை குறைத்துக் கொள்வதற்கும், இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுச் சேர்க்கவும் முடியும் என நம்புகின்றேன்.” என்றார்.

பான் ஏசியா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிமல் திலகரட்ன இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையில் கைச்சாத்திடுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான பாதுகாப்பையும் வலுவூட்டலையும் எம்மால் வழங்கக்கூடியதாக இருக்கும். இந்த உறுதியற்ற நெருக்கடி நிறைந்த காலப்பகுதியில், பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். இலங்கையர்களுக்கு நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் 27 வருட கால அனுபவத்தைக் கொண்ட வங்கி எனும் வகையில், எமது புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய பெறுமதி சேர்ப்பு அம்சங்களை இது மேலும் மேம்படுத்துவதாக அமைந்திருக்கும் என நாம் கருதுகின்றோம்.” என்றார்.

இந்தக் கைகோர்ப்பினூடாக பான் ஏசியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு தமது வங்கியியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன், புத்தாக்கமான காப்புறுதி தீர்வுகளை இலகுவாக அணுகிப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டில் காணப்படும் வேகமாக வளர்ந்து வரும் வணிக வங்கிகளில் ஒன்றாக அமைந்துள்ள பான் ஏசியா வங்கி, அதன் புத்தாக்கமான வங்கியியல் தீர்வுகள் மற்றும் சேவைகளுக்காக புகழ்பெற்றுள்ளது. வங்கி தொடர்ச்சியாக உறுதியான இலாபப் பெறுமதிகளை பதிவு செய்வதுடன், துறையின் உயர்ந்த ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசத்தின் உண்மையான இலங்கையின் வங்கியான பான் ஏசியா வங்கி தனது வினைத்திறன் மற்றும் நிலைபேறாண்மைக்காக, தொடர்ச்சியாக பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .