2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு, கிழக்கில் 84,000 பேர் துணைகளை இழந்துள்ளனர்: சுரேஸ்

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் 84,000 பேர் தங்களது வாழ்க்கைத் துணைகளை இழந்துள்ளதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜேர்மனி வாழ் புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 08 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. இதில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் கல்வித்திறன், தொழில்த்திறன் என்பவற்றை அடையாளங்கண்டு, அவர்களுக்குரிய உதவிகளைச் செய்வதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாம். ஆனால், இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக எதுவும் செய்யவில்லை.

இலங்கை அரசாங்கம் இராணுவத்திற்கு வீடு கட்டுகின்றது. இராணுவத்திற்கு நிதி கொடுக்கின்றது. ஒரு குழந்தை கூடுதலாக பெற்றால் ஒரு இலட்சம் தருவதாக சொல்கிறார்கள். அனைத்து உதவியும் இராணுவத்திற்கே போய்க்கொண்டிருக்கின்றது.

நாங்கள் வடமகாணசபை ஊடாக உதவிகளைச்; செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி தரவில்லை. நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் கூட கேட்கவில்லை. நாங்கள் இதற்கான  அனுமதியை மட்டும்  கேட்கின்றோம்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ள எமது உறவுகளிடமிருந்து பணத்தை  பெற்று இவ்வாறான உதவிகளைச் செய்யலாம் என்று நாங்கள் நினைத்தாலும், அதற்குக்கூட அரசாங்கம் இதுவரை அனுமதி தரவில்லை. 

தற்போது நாங்கள் செய்கின்ற இந்த உதவிகள் தனிப்பட்ட முறையில்  எங்களுடைய நண்பர்கள், அங்கிருக்கக்கூடிய உறவினர்கள் மூலமாக அவர்கள் ஒட்டுமொத்தமாக தங்களது உழைப்பில் ஒவ்வொருவரும் சிறுகச் சிறுகச் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் ஊடாகவும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இதில் எங்களுக்கும் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. ஏனென்றால், சில இடங்களில் உதவிகள் கிடைத்தவர்களுக்கு மீண்டும் கிடைக்கின்றது. சில இடங்களில் உதவிகள் கிடைக்காமல் இருக்கின்றது. நல்ல வீடு இருப்பவர்களுக்கு வீடு கிடைக்கிறது, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்காமல் இருக்கிறது. இப்படி நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன.

நாங்கள் இதனை மறுக்கவும் இல்லை. ஏன் இப்படி நடைபெறுகிறது என்றால் இது சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை. ஒழுங்குபடுத்தப்படாமையாலேயே சில தவறுகளுக்கு நாங்கள் முகங்கொடுக்க நேரிடுகின்றது.

இன்று உங்களுக்கு சிறிய உதவிகள் கிடைத்திருக்கின்றன. இந்த உதவிகள் ஜேர்மனி வாழ் புலம்பெயர் தமிழர்ககளின் முயற்சியின் பலனாக கிடைத்துள்ளது. 

நானும் சிறிது காலம் வெளிநாட்டில் வாழ்ந்திருக்கின்றேன். உண்மையிலேயே எங்களுடைய உறவுகள் அங்கு எவ்வளவோ கஷ்டத்திற்கு  மத்தியிலும் பனிக்காலம், வெயில் காலம் ஆகிய காலநிலைக்கு மத்தியிலும் அவர்களின் வருமானத்தில் கொஞ்சப் பணம் மூலம்  எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு அயராது உழைக்கின்றார்கள்.

இதற்கு நாங்கள் நன்றி கூறுவதோடு பாராட்டவேண்டிய விடயமும் கூட. நாங்கள் என்றுமே ஒன்றுமே இல்லாமல் வீழ்ந்து போய்விடக்கூடாது. மீண்டும் தலை நிமிர்ந்து வாழ்ந்து தங்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். யாருக்கும் அடிமைகளாக போய்விடக்கூடாது என்ற அடிப்படையில் புலம்பெயர் மக்கள் உதவி புரிகின்றார்கள். ஆகவே, இவற்றை மனத்தில்; கொண்டு உங்களுடைய குடும்பங்களை கௌரவமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோருடைய விருப்பம். எங்களால் இயன்ற உதவிகளை எத்தகைய வழிகளில் செய்ய முடியுமோ அத்தகைய வழிகளில் எல்லாம் தொடர்ந்தும் செய்வோம்.

எங்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பும் வறுமை இல்லாமல் ஒவ்வொரு குடும்பமும்; தலை நிமிர்ந்து நிற்கின்ற நிலைமை உருவாகவேண்டும். அதற்கான சிறிய உதவிதான் இவை. இதுவொரு பிரமாண்ட உதவி என்று கூறவரவில்லை. கிடைத்ததை பகிர்ந்து கொடுக்கின்றோம். ஆகவே, இவற்றை ஏற்றுக்கொண்டு நீங்கள் முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும்' என்றார்.



  Comments - 0

  • siva Tuesday, 20 May 2014 08:55 AM

    இப்போது இருக்கும் குடும்ப பெண்களை மீண்டும் கணவர்களை இழந்து தவிக்கவேண்டுமா? அதுவா உங்களின் அடுத்தக்கட்ட நகர்வு? அந்தளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு யுத்தம் வேண்டும் என்கிறது. அதன் ஒரு கட்டம் பழைய நினைவுகளை தேடி சென்று அதை தூண்டுவது உங்கள் அனைவரின் கொள்கையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X