2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது: கே.பி

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


எமது சமூகத்திலுள்ள பெற்றோர்களின் வறுமை, கல்வியறிவின்மை போன்ற காரணிகளால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இருந்தும் எம்மால் முடிந்தவரை இவ்வாறான சூழ்நிலைகளில் வாழ்கின்ற குழந்தைகளை அரவணைத்து, அவர்களுக்கான வசதி வாய்ப்புக்களை வழங்கி சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என நேட்டோ நிறுவனத் தலைவர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) தெரிவித்தார்.

முல்லைத்தீவு, முள்ளியவளையில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே கே.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,

'அன்பு குழந்தைகளே! உங்களுக்கு கிடைத்திருக்கும் இப்பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும். பெண்கள் என்றாலே அடிமைத்தனமானவர்கள் என நினைக்கும் ஒரு வட்டத்துக்குள் கட்டுப்பட்டு உங்களை அழிக்காமல் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து பல சாதனைகளை செய்யுங்கள்.

இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என நீங்கள் நன்றாக தெரிந்துள்ளீர்கள். நெருப்பை தொட்டால் சுடும் என்று தெரிவது போல் கெட்ட விடயங்கள் அழிவையே தரும். உங்களுக்கு உறுதுணையாக இல்லாதவற்றை விட்டு நல்வழியில் செயற்படுங்கள். நல்ல வழியில் செயற்படும் போதே எதிர்காலம் சிறந்ததாக அனைவருக்கும் கிடைக்கும்.

நல்லதை நினைத்து நல்லதையே செய்யுங்கள் நீங்கள் ஆண்டவனுக்குப் பக்கத்தில் இருப்பீர்கள். உங்களை யாரும் எதுவும் செய்யமுடியாது. நாம் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்யக் காத்திருக்கிறோம். உங்களிடம் நாம் வேண்டுவது ஒன்றே. அது கல்விதான். கல்வியால் உயர்வடைந்தால் அது எமக்கும் உங்களுக்கும் பெருமை.

கல்வியின் மூலமே அனைத்தையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். கல்வியில் உயர்வடைந்தவர்களையே சமூகம் போற்றுகின்றது. அவர்களுக்கு மதிப்பளிக்கின்றது. எனவே கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்தி கல்வியறிவினைப் பெருக்கி சமூகத்திற்கு பயன்பாடுடைய நற்பிரஜைகளாக உருவாக வேண்டும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறுமிகளின் கிராமிய நடனம், ஆங்கில கவிதை, கவியரங்கம், பாடல், கர்ணன் நாடகம் என்பன இடம்பெற்றது. இந்நிகழ்வில் இல்லத்தின் தந்தையும் நேட்டோ நிறுவன தலைவர் செல்வராசா பத்மநாதன், கிராம சேவையாளர் எஸ்.கிருஸ்ணமூர்த்தி, முள்ளியவளை பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி  ஏச்.எம்.எஸ்.திலகரட்ண, பாரதி செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் சிறுமிகள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X