2025 ஜூலை 21, திங்கட்கிழமை

காணி வழங்கப்பட்டது உண்மையில்லை : மறைக்கார் தீவு கிராம மக்கள்

Super User   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி மறைக்கார் தீவு கிராம மக்களுக்கு   தற்போது அவர்கள் உள்ள இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் 50 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது செய்தியில் உண்மை இல்லையென மறைக்கார் தீவு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் மௌலவி மகுமுது தௌபீக் தெரிவித்தார்.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி மறைக்கார் தீவு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் செயற்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு மன்னார் சின்னக்கடையில் உள்ள விடுதியில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

மறிச்சிக்கட்டி மறைக்கார் தீவு கிராம மக்கள் வாழ்து வரும் இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அந்த மக்களுக்காக 50 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் அக்காணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அது தொடர்பாக எமக்கும் அந்த மக்களுக்கும் எதுவும் தெரியாது.

129 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் 70 குடும்பங்களுக்கு காணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாங்கள் தற்போது இருக்கின்ற காணி நாங்கள் ஏற்கனவே வாழந்து விட்டுச் சென்ற பூமி. 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் எமது மூததையர்கள், பெற்றோர்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற பூமி என்பதினால் மீண்டும் அக்காணிக்கு நாம் 2009 ஆண்டு வந்த போது அந்தக்காணியில் அதிகமான பகுதிகளை கடற்படையினர் தமது பாதுகாப்புக்காக சுவீகரித்துக்கொண்டனர்.

இதனால் எமது மூதாதையர்கள் வழ்ந்து இறந்து அடக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலே நாங்கள் தற்போது சிறு கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருவதோடு எமக்கு காணி வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

எமக்கு புதிய காணி வழங்குவதாக இருந்தால் தற்போது உள்ள எமது இடத்தோடு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அதை விட தற்போது நாம் உள்ள இடம் வனவிலங்கு சரணாலயத்திற்கு சொந்தமானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அக்காணி இந்தியா அல்லது சைனாவினுடையதோ இல்லை. இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி. எங்களுடைய காணிகளின் பல பகுதிகளை அரசாங்கத்தின் கடற்படையினர் பிடித்து வைத்துள்ளனர்.இதனால் தற்போது நாம் உள்ள பகுதிகளையாவது தந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

எமக்கு 50 ஏக்கர் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.அது தொடர்பாக எமது கிராமத்திற்கு எந்த அதிகாரிகளும் வந்து எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை.

இது தொடர்பாக எவ்வித பேச்சுக்களும் இடம் பெறவில்லை.இது ஒரு அரசியல் திருவிளையாடல் என நாம் நம்புகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X