2025 ஜூலை 21, திங்கட்கிழமை

காணி அபகரிப்பு தொடர்பாக நேரில் சென்று பார்வை

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்பு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று வெள்ளிக்கிழமை(2) விஜயம் செய்திருந்தனர்..

இந்த குழுவிவினர் மன்னார் தீவுப் பகுதியில் மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட உவரிகருப்பன் குடியிருப்பு தென்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் அரசியல் செல்வாக்கில் அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமான காணியினை அபகரித்து சுற்று வேலியினை அடைத்துள்ளார்.

குறித்த பகுதிக்குச் சென்ற குழுவினர் அபகரிக்கப்பட்ட காணியினை பார்வையிட்டதோடு, அயலவர்களுடன் உரையாடினர். இதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர்  பேசாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்யப்படுவதாக கூறப்படும் இடத்திற்குச் சென்று நிலமையை ஆராய்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை(02) மாலை முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்வத்து ஓயா பகுதியில் படைத்தரப்பினர் சட்டவிரோதமான முறையில் மேற்கொண்டு வரும் மணல் மண் அகழ்வினை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

அதன்பின் சர்ச்சைக்குரிய மறிச்சுக்கட்டி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினர். அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக  கேட்டறிந்தனர்.

இறுதியாக குறித்த குழுவினர் முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்று சுமார் 5 வருடங்களுக்கு மேலாக காடுகளில் அகதி வாழ்வு வாழ்ந்து வரும் மக்களை சந்தித்தனர்.

முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 174 குடும்பங்கள் தற்போது வரை காடுகளில் தற்காலிக கூடாரங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தம்மை தமது சொந்த இடமான முள்ளிக்குளத்தில் கடற்கடையினர் ஆக்கிரமித்துள்ள தமது இடங்களிலே குடியேற்ற வேண்டும் என அந்த மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் மன்னார் ஆயர் வழங்குகின்ற உதவிகளை வைத்தே தமது வாழ்க்கையை நடாத்தி வருவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ள தற்காலிக கூடாரங்கள் பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டமையினால் அவை சேதமடைந்து காணப்படுகின்றது. எனவே எங்களை எமது சொந்த இடத்திலேயே மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த மக்கள் குறித்த குழுவிடம் முன் வைத்தனர்.

பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறித்த குழுவினர் தெரிவித்தனர்.

 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராசா, வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின், மற்றும் இவர்களுடன் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை,செயலாளர் பி.ரி.சிந்தாத்துரை,மன்னார் பிரதேச சபை உப தலைவர் அந்தோனி சகாயம் உள்ளிட்டவர்கள் குறித்த குழுவில் கலந்து கொண்டிருந்தனர்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X