2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அடிமையற்ற வாழ்வைக் கடைப்பிடித்தவர்கள் தமிழ் மக்கள்: மாவை

Suganthini Ratnam   / 2014 மே 06 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடிமையற்ற வாழ்வை உயர்ந்த ஒழுக்கமாக கடைப்பிடித்தவர்கள்  தமிழ் மக்களே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

கரைச்சி பிரதேச சபையில் 4.5 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள பொதுநூலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (05) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'அறிவு சார்ந்த விடயத்துக்கான நிகழ்வில் பங்குபற்றுவதில் மிக்க  மகிழ்ச்சி. 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். இதன்  அடிப்படையில் அரை நூற்றாண்டுக்கு முன்னர் உலக அறிஞர்கள் கூடி இது பற்றி ஆராய்ந்தனர். உலகத்தில் ஒழுக்கம் வரையறுத்தவற்றை ஆராய்ந்தனர். கடைசியில் ஒழுக்கத்தை பற்றிய சிறந்த வரையறையை வள்ளுவர் வகுத்திருக்கிறார்.

நாம் ஆடை அணிவது முதல் உணவுவரை ஒழுக்கத்தை பற்றி பேசிக்கொள்கிறோம். ஆனால், ஒழுக்கத்தை உயிரினும் மேலாக வரையறுக்கும் வள்ளுவர்,  ஒழுக்கம் என்பது அடிமையற்று வாழ்வதே எனக் கூறியிருக்கிறார்.  அந்த உயரிய ஒழுக்கத்தை பேணிய சமூகமாக நாம் இருக்கிறோம். ஒழுக்கத்திற்காக உயிர் கொடுத்து இரத்தம் சிந்தி சொத்துக்களை, சுகங்களை அர்ப்பணித்த இனமாக நாம் இருக்கிறோம்.

நாம் எமது மொழியை பேசாவிட்டால், நாம் யார்? நமது மண் எது? அந்த மண்ணின் பெயர் எது? என்று கூற முடியாது. உயரிய ஒழுக்கத்தை பேணவும் முடியாது.  எனவேதான், எமது பண்டைய மக்கள் எமது இனத்துக்கான அடையாளங்களை வரையறுத்து வைத்துள்ளார்கள். நாம் அதைப் பேண வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கானதொரு பெட்டகமே நூலகம்.

நூலகத்தைச் சுற்றி ஆரோக்கியமான  சூழல் உருவாகும். பாரதி குறிப்பிடுவது போல காணி நிலம் வேண்டுவதும் அதில் மாடங்கள் வேண்டுவதும் இந்த உலகை வாழ்விக்க வகை செய்வதற்கே. அது இங்கு நிகழும் என நம்புகின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X