2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் காணி சுவீகரிப்புகளுக்கு கண்டனம்

Kanagaraj   / 2014 மே 10 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் தமிழன குடிபரம்பலை சிதறடிக்கும் வகையில் காணி சுவீகரிப்புகள் இடம்பெறுவதாக  வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்குளத்தில் நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றத்துக்கான வேலைத்திட்டங்களை தடைசெய்யக்கோரி கடந்த மார்ச் 18 அன்று என்னால் கொண்டு வரப்பட்ட பிரேரணை வடமாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள போதும், குறித்த குடியேற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படாமல் நன்கு திட்டமிட்டபடி தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதி தமிழ் கிராமங்களில் ஒன்றான கொக்கச்சான்குளம் 'கலா போகஸ்வௌ' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு 3500க்கும் மேற்;பட்ட சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு எல்லைக்கிராம பகுதிகளில் இத்தகைய திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் வலுத்தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைப்பிரதேசங்களில் தமிழர்களின் இன ரீதியான குடிநிலைப்பரம்பலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் வேலைத்திட்டங்களும், அரசு மற்றும் அரச படைகளின் அனுசரணையுடன் முழு வீச்சில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் மன்னார் மதவாச்சி யு14 வீதியில் கல்லாறுக்கு வடக்காகவும், மன்னார் வீதிக்கு மேற்காகவும் உள்ள, 2009ல் இறுதி யுத்தம் காரணமாக இடம் பெயரச்செய்யப்பட்ட எமது தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்ட 6348 ஏக்கர் காணியை இராணுவத்திடம் கையளிக்குமாறு காணி ஆணையாளர் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளரை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த காணிகள் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய காணிகளாகும். இந்த காணிகளுக்கு பரம்பரை வழித்தோன்றலாக உரித்துடையவர்கள் தமக்கே உரித்தான சொந்தக்காணிகளை பராமரிக்க சென்ற போதெல்லாம் இராணுவத்தால் தாக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அக்காணிகளுக்குள் மக்கள் உட்பிரவேசிக்கவும் இராணுவத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய முரண்பாடான குடியேற்ற நடவடிக்கைகளும், முறையற்ற காணி சுவீகரிப்புகளும் வவுனியா மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் இன ரீதியான குடிநிலைப்புள்ளியியல் அமைப்பில் பாரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த போகின்றன.

தமிழின பரம்பலையும், தமிழின விகிதாசாரத்தையும் சீர்குலைக்கும் தனிச்சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இத்தகைய திட்டமிட்ட குடியேற்றங்கள், காணி அபகரிப்புகளுக்கு எதிராக எதிர்வினையற்ற தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் தரப்பினரையும் ஒன்றுபட்டுச் செயல்பட முன்வருமாறும்; அழைப்பு விடுக்கின்றேன் என அவர தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X