2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தட்டயமலையில் சட்டவிரோத கருங்கல் அகழ்வு

Super User   / 2014 மே 11 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் உள்ள தட்டயமலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கருங்கல் அகழ்வு இடம்பெறுவதாக வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதியை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கருங்கல் அகழ்வு நடைபெறும் பகுதிகளில் குறிப்பிட்ட ஆழம் வரை மட்டுமே அகழ்வு செய்யமுடியும் என்று விதிக்கப்படுகிற போதிலும் அவற்றை கணக்கிலெடுக்காது அதிக ஆழம் வரை கருங்கல் அகழப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

எமது மாவட்டத்தின் குறிப்பாக ஒட்டுசுட்டான் பகுதியின் இயற்கை ஒழுங்கமைப்பில் கருங்கல் பாறைகளும் மலைகளும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

எனினும் இப் பகுதியில் ஒரு சில அரசியல்வாதிகளின் பின்னணியில் இயங்கும் நிறுவனங்கள் அனுமதியைப்பெற்று கருங்கல் அகழ்வை மேற்கொண்டு வருகின்றது.

யுத்த முடிவிற்கு பின்னர் தமிழர் வாழ்வியலை சிதைக்கும் நோக்குடன் எல்லா வழிகளிலும் முன்னெடுக்கப்படும் செயல்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது.

தமிழர் பிரதேசங்களில் எதுவித கவனிப்பும் காட்டாத நிறுவனங்களுக்கு இவ்வாறான அனுமதிகளை கொடுப்பதும் விதிமுறைகளை தாண்டியதாக அகழ்வுகளை மேற்கொண்டு இயலுமான அளவு கருங்கல் சூறையாடப்படுவதும் எமது இயற்கையையும் தமிழர் குடியிருப்புகளையும் சிதைப்பதாகவே அமைகிறது.

சில நாட்களுக்கு முன்னர் தட்டயமலை பகுதி வாழ் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தை பார்வையிட சென்ற போது சுமார் 50 அடி ஆழத்திற்கு மேல் கருங்கல் அகழப்பட்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

பொறுப்பற்ற முறையில் வளச்சூறையாடலை நடாத்தும் நிறுவனத்திற்கு அனுமதி கொடுப்பவர்கள் இவற்றை பார்வையிடுவதில்லையா என்ற கேள்வியே எழுகிறது.

அத்தோடு தட்டயமலைப்பகுதியின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அதற்கு கீழ் அகழக்கூடாது என்ற அடையாளமும் காணப்படுகிறது. ஆயினும் அதனை விட கூடுதல் ஆழத்திற்கு அந்த அகழ்வின் மறுபக்கம் ஆழப்படுத்தப்பட்டு கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

எமது மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல மலைகள் இப்படியாக தோண்டப்பட்டு வளங்களை சூறையாடி இயற்கை சமநிலையை கேள்விக்குறியாக்கி நாசகார செயல்களை அத்துமீறி செய்பவர்களும் இதற்கு துணை போகின்றவர்களும் மன்னிக்கப்பட முடியாதவர்களாகும்.

மக்கள் அன்றாட வாழ்வுக்கு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பட்டப்பகல் கொள்ளை போல இச்சுரண்டல் நடைபெறுகின்றன. இதனை கண்காணிக்க வேண்டியவர்கள் மனச்சாட்சியுடன் நடந்து அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதுவும் நடைபெறாது இவை இப்படியே தொடரும் பட்சத்தில் இவ்வாறான கீழ்த்தர செயல்களுடன் தொடர்புபடுபவர்கள் எல்லோரும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் எனவும் அதன் மூலம் இவ்வாறான வளச்சுரண்டல் நிறுத்தப்படும் எனவும் ரவிகரன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X