2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சுகாதார அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2014 மே 20 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்

வலுவிழப்புடன்கூடிய பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான தீர்மானமொன்று வடமாகாண சுகாதார அமைச்சரிடம் திங்கட்கிழமை (19) கையளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் (ஓகான்) அனுசரணையுடன் முல்லைத்தீவில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டின் முடிவின் கோரிக்கைகள் அடங்கிய மாநாட்டுத் தீர்மானமே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

'வீடு பெண்களுக்கு கூண்டல்ல' எனும் கருப்பொருளுடன் திங்கட்கிழமை(19) நடைபெற்ற முழுநாள் பட்டறையில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தலா பத்து வலுவிழப்புடன்கூடிய பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 75 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் முடிவில் பாதிக்கப்பட்டவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய தீர்மானமொன்று வடமாகாணசபையின் கரிசனைக்காக நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனுவில், வலுவிழப்புடன்கூடிய பெண்களுக்கான வாழ்வாதாரம், வலுவிழப்புடன்கூடிய பெண்களுக்கான சமூக அங்கீகாரம், வலுவிழப்புடன்கூடிய பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர்,

'மூன்று தசாப்தகொடிய யுத்தத்தின் வடுக்களை தாங்கி அதன் வலிகளை சுமந்துகொண்டு வேதனைப்படும் உங்களின் மனநிலை எனக்கு புரிகிறது. குறிப்பாக இறுதியுத்தத்தின்போது அவயவங்களை இழந்து சுயமாக நடமாடமுடியாது சுயகடன்களைச் செய்யக்கூட மற்றவர்களில் தங்கியிருக்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள சகோதரிகளே மனம் தளராதீர்கள்.

உங்களால் இன்று கையளிக்கப்பட்ட இந்த கோரிக்கை தீர்மானத்திலுள்ள ஒவ்வொரு வரிகளும் நெஞ்சை உலுக்குவதாகவே உள்ளது. இந்த தீர்மானமானது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும். அத்துடன் வடமாகாண சபையினால் எம்மாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் பாடுபடுவோம்' என்றார்.

இந்த நிகழ்வில் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் எஸ். .சுப்பிரமணியம், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் மற்றும் வடமாகாணத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X