2025 ஜூலை 19, சனிக்கிழமை

புதிய அதிபர் நியமனத்தை கண்டித்து பேரணி

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையினை கண்டித்து அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று திங்கட்கிழமை (21), எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பாடசாலை, மன்னார் மாவட்டத்தில் தலைசிறந்ததும் முதன்மையானதுமான கத்தோழிக்கப் பாரம்பரியத்தின் வழிகாட்டலின் கீழும் உயர்ந்து விளங்கும் பாடசாலையாக காணப்படுகின்றது.

இப்பாடசாலையின் வரலாற்றின் அடிப்படையில் கத்தோழிக்க மதத்தினைச் சேர்ந்த குருவானவர்கள் மற்றும் டிலாசால் அருட்சகோதரர்கள் ஆகியோரால் பாடசாலை வழிநடத்தப்பட்டு வருகின்றது.

இப்பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்கு, கடந்த 6 சதாப்தங்களுக்கு மேலாக டிலாசால் அருட்சகோதரர்களையே சார்ந்து காணப்படுகின்றது.

இந்நிலையில், மத்திய அமைச்சின் கீழ் புதிதாக அதிபர் சேவை தரத்தினை பெற்றுக்கொண்ட ஒருவர் இப்பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டார். குறித்த அதிபர் தனது அதிபர் நியமனத்தை ஏற்றுக்கொள்ள இன்று திங்கட்கிழமை பாடசாலைக்கு வருகை தர இருந்தார்.

இந்த அதிபரின் வருகையை கண்டித்தும் அவரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பலர் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இன்று காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள், பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக மன்னார் வலயக் கல்விப் பணிமனையினை சென்றடைந்தனர்.

இதன்போது, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் பெற்றோர், பழைய மாணவர் சங்கப் பிரதி நிதிகள் ஆகியோர் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியானைச் சந்தித்தித்து உரையாடினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தையின் பின்னர், உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த புதிய அதிபரின் நியமனத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்த மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், தற்போது உள்ள அதிபரின் நிர்வாகம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அதில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து மன்னார் வலயக் கல்விப் பணிமனைக்கு முன் கூடியிருந்த பெற்றோர் கலைந்து சென்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X