2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நீதி கிடைத்தாலேயே மக்கள் நம்பிக்கை கொள்வர்

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு, அவர்களுக்கு நீதியும் கிட்ட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

நேற்று (23)  அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள்  சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தயின் கொலை அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்த அனுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகள் எட்டுபேரின்  அடிப்படை உரிமை தொடர்பான வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன்போது சட்டமா அதிபர் சார்பாக முன்னின்று  உதவி சொலிசிட்டர் ஜெனரல் ரஜீவ் குணதிலக்க "கைதிகள் தங்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்றுமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றதோடு அதற்கு காரணம் "அவர்கள் உறவினர்களின் உதவியை பெற்றுக் கொள்வார்கள்" என்பதாகும் என சிங்கள ஊடகம் ஒன்று வெள்ளிக்கிழமை (22 ) செய்தி வெளியிட்டிருந்தது.

இக்கூற்று உண்மையெனில் இது நியாயத் தன்மை அற்றது மட்டுமல்ல, அடிப்படை மனித உரிமை மீறும் மற்றும் அதனை அவமதிக்கும் செயலுமாகும் என்பதால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கவலை அடைவதோடு, இத்தகைய கூற்றுக்கள் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் தன்மை கொண்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

சிறைக்கைதிகள் தமக்கான உதவிகளையும், சட்ட ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கு தகுதி உடையவர்களாவர். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. 

அத்தோடு ஒரு நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிட்ட ஒருவர் சட்ட உதவியோடு மேல் நீதிமன்றத்திற்கு மீண்டும் மனு செய்யும் உரிமையும் உள்ளது. இதனை தடுக்க எவராலும் முடியாது. 

அதுமட்டுமல்ல சிறையில் இருப்பவர்கள் உறவினர்களை பார்ப்பதற்கும் அவர்களோடு உறவை வளர்ப்பதற்கும் உதவிகளை பெறுவதற்கும் இது வரை எவரும் தடை விதித்ததும் கிடையாது.  இதனை எவராலும் தடுக்க முடியாது. தடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும்.

விசேடமாக அனுராதபுரம் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பாதிக்கப்பட்டவர்கள். மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பவர்கள். இவர்களை மனிதாபிமானம் கருதியும், பாதுகாப்பு கருதியும் அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றுவதே சிறந்தது. 

அதை விடுத்து பெற்றோர், உறவினர் உள்ள இடத்துக்கு மாற்றினால்  உதவிகளைப் பெற்று விடுவார்கள் என மறுப்பு தெரிவிக்கின்றமை மனித உரிமை மீறும் செயல் மட்டுமல்ல சிறைச்சாலை மகுட வாசகத்தையும் தூசிக்கும் செயலுமாகும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X