2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மீளக்குடியமராதோர் உடன் பதியவும்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து, மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் கையகப்படுத்தலில் உள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விவரங்களை  பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து, பல வருடங்களாக மீள்குடியேறாத குடும்பங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்டச் செயலகங்கள் ஊடாக தற்போது இடம்பெற்று வருகின்றன என்றார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வலிகாமம் வடக்கிலேயே அதிகளவிலான மக்கள், 30 வருடங்களுக்கு மேலாக மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், 18 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவில் விடுவிக்கப்படாமலும் 3 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் இருக்கின்றன எனவும் கூறினார்.

அத்துடன், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார்கள் என்றும், தவிசாளர் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில், மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்வதற்கு, வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூலம், இந்த விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்த அவர், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஆகியவற்றில் இருந்து இந்த விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, உடனடியாக பூரணப்படுத்தி வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

இதனை வழங்குவதன் மூலமே. மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தி, கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் எவ்வளவு மக்களுடையது என்பதை அடையாளப்படுத்த முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.

'மீள்குடியேற்றத்துக்காக மக்கள் இல்லை என்ற கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அதன் உண்மையான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.

'ஏற்கெனவே விவரங்களை வழங்கி இருந்தாலும், இந்த முறை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்கள் சரியாக பேணப்படாமையால் மீள்குடியேற்றம் தாமதமாகி வருகிறது' என்றும், அவர் கூறினார்.

எனவே, 'பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு, கட்டுவன், குரும்பசிட்டி ,குரும்பசிட்டி கிழக்கு, வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, மயிலிட்டித்துறை வடக்கு, தையிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு,பலாலி கிழக்கு, பலாலி தெற்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் முழுமையாக விடுவிக்கப்படாத பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டித்துறை தெற்கு கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும'; என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .