2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்காக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சால்  மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கு திறைசேரி அங்கிகாரம் அளித்துள்ளதாக மாநகர சபையின் முன்னாள் முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், நாளை வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு மாநகர முதல்வர் செயலகத்தில் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட கல்முனை மாநகர சபையின் 08 அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் மூலம் 14 கோடியே 80 இலட்சம் ரூபாயையும்  சாய்ந்தமருது தோணாவை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்காக சுமார் 10 கோடி ரூபாயையும் ஒதுக்கீடு செய்ததுடன், இந்நிதி ஒதுக்கீடு தொடர்பில் திறைசேரிக்கு கடந்த மே மாதம் 31ஆம் திகதி அறிவித்திருந்தார். இதற்கு கடந்த 11ஆம் திகதி திறைசேரி அங்கிகாரம் அளித்துள்ளது.

கல்முனை பொதுச்சந்தை அபிவிருத்திக்கு 2 கோடியே 60 இலட்சம் ரூபாயும் கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொதுநூலக அபிவிருத்திக்கு 2 கோடியே 25 இலட்சம் ரூபாயும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின்; பார்வையாளர் அரங்கின் இரண்டாம் கட்ட நிர்மாணத்துக்கு 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும் மருதமுனையில் மாநாட்டு மண்டபம் அமைப்பதற்காக 5 கோடியே 90 இலட்சம் ரூபாயும் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு 1 கோடி ரூபாயும் சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்கள் அமைப்பதற்கு தலா 45 இலட்சம் ரூபாய் படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.   

இவ்வாறிருக்க, கல்முனை மாநகர பிராந்தியத்தின் வெள்ள அபாயப் பாதுகாப்பு திட்டத்துக்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படுகின்றது. அந்த அறிக்கை கிடைத்ததும் அதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .