2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'சுமார் 8,500 ஏக்கர் விவசாயக் காணிகள் நீரில் மூழ்கின'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்புப் பிரதேசங்களில் சுமார் 8,500 ஏக்கர் விவசாயக் காணிகள், கல்ஓயா அபிவிருத்தித்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நீரில் மூழ்கியுள்ளன. இக்காணிகளை நீரிலிருந்து மீட்பதற்கு பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேசங்களுக்கான  ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் மற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகளின் நீர்ப்பாசன பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன காரியாலயத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ' இதற்காக கட்டம் கட்டமாக நீர்ப்பாசனத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிரந்தரமாக மக்களுக்கு நன்மை பெறக்கூடிய திட்டங்கள் பூரணமாக நிறைவேற்றி முடிக்கும்வரை எமது விவசாயிகள் பொறுமைகாக்க வேண்டும். சம்புக்களப்பு வடிச்சல் திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக பல அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் இப்பிரதேச மக்களுக்கு வாக்குறுதியளித்து, இம்மக்களின் வாக்குகளினால் பதவிகளைப் பெற்றுவிட்டு இப்பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதனை எமது பிரதேச விவசாயிகள் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறான திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது அரசியல் தலைவர்கள், நீர்ப்பாசன அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் ஒன்றாக அமைய வேண்டும்.  அப்போதுதான் நாம் மேற்கொள்ளும் நீர்ப்பாசன திட்டங்கள் சிறந்ததாகவும் வெற்றிகரமாகவும் அமையும்' என்றார்.

'நீண்டகாலமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின் நீர்ப்பாசனத் திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு எமது மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் நீர்ப்பாசன திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய ஆட்சியிலும் விவசாயிகளின் நன்மை கருதி கரையோர பிரதேச நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களினால் எமது பிரதேச விவசாயிகளும் மக்களும் நன்மையடையவுள்ளனர்' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .