2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2013இல் கல்முனை பாரிய அபிவிருத்தியை காணும்: ஹரீஸ் எம்.பி.

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


2013ஆம் ஆண்டிலிருந்து கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் பாரிய அபிவிருத்தியைக் காணும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக பொதுமக்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக எச்.எம்.எம்.ஹரீஸ் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதேச ஊடகவியலாளர்களுக்கு
விளக்கமளிக்கப்பட்டது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது கல்முனை பிரதேசம் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு அண்மைக்கால அரசியல் மாற்றங்களே பிரதான காரணமாக உள்ளது. எவ்வளவு தான் அபிவிருத்திப் பணிகள்  என்னால் கல்முனை பிரதேசத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டபோதிலும், அவை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறப்படாமையினால் ஒன்றுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் தற்போது நிலவிவருகின்றது. கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் காத்தான்குடியில் இருப்பது போன்று பிரதான வீதியில் மரங்கள் நாட்டப்பட்டு அழகிய பூமரங்கள் நாட்டப்படுவதனையே அபிவிருத்தி என்று எண்ணுகின்றார்கள். ஊருக்குள் என்ன நடக்கின்றது என்பதனை வெளிக்கொணர பொதுமக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்றப் கல்முனை நகர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அன்று கண்ட கனவை நனவாக்க வேண்டியது எனது பாரிய பொறுப்பாகும். அதற்கு கல்முனை பிரதேசத்திலுள்ள துறைசார் உத்தியோகஸ்தர்களும் வர்த்தகர்களும் தமது பூரண ஒத்துழைப்பை எதிர்காலத்தில் வழங்க வேண்டும். வீதி மின்விளக்குகளை கல்முனை மாநகர மேயராக இருந்த காலத்தில் நான் அறிமுகப்படுத்திய பின்னர் தான் காத்தான்குடி மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அரசியல் ரீதியில் கல்முனை பிரதேசம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் இருப்பதால் அரசுடன் இணைந்து செயல்படுவதில் கடந்த காலங்களில் பல சிக்கல்கள் தோன்றியிருந்தது. அதனால் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் எமக்கு அடிக்கடி தடைகள் ஏற்பட்டிருந்தது. இருந்தும் அந்த தடைகளையும் மீறி சில அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளேன். தேர்தல் காலங்களில் அபிவிருத்தி சம்பந்தமாக பொதுமக்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் வழங்காத நிலையிலும் கூட கல்முனை பிரதேச மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே தொடர்ச்சியாக வாக்களித்து வெற்றினையும் பெற்றுத் தந்துள்ளனர். அந்த வகையில் இப்பிரதேச மக்களின் நன்றியுணர்வை மறந்துவிட முடியாது.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக உள்ளமையினால் எதிர்காலத்தில் கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு முதல் பெரிய நீலாவணை வரையிலான சகல பிரதேசங்களும் பாரிய அபிவிருத்தியடையவுள்ளன.

ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுகக் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று ஒப்பந்தக்காரர்களால் தற்போது துறைமுக அதிகாரசபையிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒலுவில் துறைமுகம் செயற்பட தொடங்கியதும் கல்முனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். சுனாமி அனர்த்தத்தினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட கட்டிட இடிபாடுகளால் கரையோர மீனவர்கள் எதிர்நோக்கும் மீன்பிடி பிரச்சினைக்கு இபாட் அமைப்பின் முக்கியஸ்தர்களுடன் கதைத்துள்ளேன். மிக விரைவில் கடலுக்குள் காணப்படும் இடிபாடுகளை அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபடவுள்ளதாக உறுதியளித்துள்ளனர்.

சுகாதாரத்தை பொறுத்தவரையில் கல்முனை பிரதேசம் மிகவும் சிறப்பு அடைந்துள்ளது. வைத்தியசாலைகளும் வைத்தியர்களும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றனர். கல்வி அபிவிருத்தி சம்பந்தமாகவும் கல்முனை வலய கல்வி பணிப்பாளருடனும் பிரதேச கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவையும் தீர்த்து வைக்கப்படும்.

கல்முனை மாநகரை அழகுபடுத்தும் திட்டத்திற்கு பிரதான வீதி இன்னும் விரிவாக்கப்பட வேண்டியுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக வர்த்தக சமூகத்தினரை விரைவில் சந்தித்தது கலந்துரையாடிய பின்னர் வீதி அபிவிருத்தி சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்முனை பிரதான வீதி அகலமின்றி காணப்படுவதனால் அடிக்கடி வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. மக்களின் போக்குவரத்திற்கு பாரிய சவாலாக இது இருந்து வருகின்றது.

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் முன்னெடுத்துச் செல்லப்படும்போது அப்பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதனையும் செய்ய முடியாது. பொதுமக்களின் அபிப்பிராயம் பெறப்படாத எந்தவொரு திட்டமும் வெற்றியளிக்கவும் இல்லை. எனவே கல்முனை பிரதேச எதிர்கால திட்டங்கள் அனைத்தும் துறைசார் அதிகாரிகளிடமும் பொதுமக்களின் அபிப்பிராயத்துடனும் ஆலோசனையுடனுமே முன்னெடுத்துச் செல்லப்படும்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • kamran Monday, 24 December 2012 07:47 AM

    In Saudi Arabia- Abdullah city also they installed street lamp posts after Hon. Harees MP installed in Kalmunai main road.
    What a great work Sir!!!!

    Reply : 0       0

    aroosh Monday, 24 December 2012 11:36 AM

    நன்று.

    Reply : 0       0

    Nafeel Monday, 24 December 2012 01:16 PM

    எழும்பிட்டான்யா கும்பகர்ணண்.

    Reply : 0       0

    Kuruvi Monday, 24 December 2012 04:43 PM

    எப்படி அப்பா இப்படி திறமையாகவும் துள்ளியமாகவும் கூற முடிகிறது..!!!! வாழ்த்துக்கள் எம்.பி அவர்களே..!!!

    Reply : 0       0

    sukri Monday, 24 December 2012 04:49 PM

    இன்னா லில்லஹி வைன்னா இலைஹி ராஜி ஊன்

    Reply : 0       0

    khaleel rahman Thursday, 27 December 2012 04:49 PM

    செய்வார். ஆனால் செய்யமாட்டார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .