2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் தலிபான் தலைவர் கொல்லப்பட்டார்?

Shanmugan Murugavel   / 2016 மே 22 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில், தலிபான்களின் பிரதான பிரிவான ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் மீது அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில், அவர் கொல்லப்பட்டிருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் அனுமதியளிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், எல்லையின் பாகிஸ்தானியப் பக்கமாக, பாகிஸ்தானிய நேரப்படி சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல ட்ரோன்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஆயுததாரிகளுக்கெதிரான நடவடிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி ஒபாமா பதவியேற்ற பின்பு, ஆயுதக் குழுக்களின் தலைமைகளை இலக்குவைக்கும் பணிகள் அதிகரித்திருந்தன. அல் கொய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டமை தொடக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான்கள், ஏனைய ஆயுதக் குழுக்களின் சிரேஷ்ட தலைவர்கள், தொடர்ந்தும் இலக்குவைக்கப்பட்டனர்.

அதேபோல், தலிபான்கள், அல் கொய்தா உறுப்பினர்கள் ஆகியோர், பாகிஸ்தான் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நிலவும் நட்புறவு காரணமாக, பாகிஸ்தானுக்குள் தாக்குதல்களை மேற்கொள்வதை, அமெரிக்கா தவிர்த்து வந்தது. ஆனால், ஒபாமாவின் கீழ், ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதும் பாகிஸ்தானில் என்பதோடு, தற்போது தலிபான் தலைவரும் பாகிஸ்தானிலேயே இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது, ஆயுததாரிகளை ஒழிப்பதற்கு, பாகிஸ்தானிய எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதற்கு, அமெரிக்கா தயாராக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

தலிபான் தலைவரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய பென்டகன் பேச்சாளர் பீற்றர் குக், அந்தத் தாக்குதலில் மன்சூர் கொல்லப்பட்டாரா என்பதை உறுதியாகக் கூறுவதற்கு மறுத்துவிட்டார். மாறாக, மேலதிக தகவல்கள் கிடைத்ததும் தெரிவிப்பதாகக் கூறினார்.

மன்சூரும் இன்னொரு போராளியும், பாகிஸ்தான் அஹ்மட் வால் நகரில் வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்க அதிகாரிகளில் பலர், இந்தத் தாக்குதலில் மன்சூர் கொல்லப்பட்டுவிட்டார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்துகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மன்சூருக்கு நெருக்கமான தளபதியொருவர், இந்த அறிக்கைகள் ஆதாரமற்றவரை எனத் தெரிவித்ததோடு, அவர் கொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தலிபான்களின் தலைவராகக் காணப்பட்ட முல்லா ஓமர், 2013ஆம் ஆண்டு இறந்திருந்த போதிலும், 2015ஆம் ஆண்டே தலிபான்களால் அவரது இறப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .