2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இட்லிப்பில் ரஷ்ய, சிரிய ஜெட்கள் தாக்குதல்

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிய எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் மாகாணத்தில் ரஷ்ய, சிரிய யுத்த விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளன.

ரஷ்ய, ஈரான், துருக்கி ஜனாதிபதிகளிடையே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், ரஷ்ய ஆதரவுடனான வலிந்த தாக்குதல் நடவடிக்கையொன்றை நிறுத்துவதற்கான யுத்த நிறுத்தத்துக்கு இணங்கத் தவறிய மறு நாளான நேற்றே குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் ஆட்சிக்கெதிரான இயங்குநிலையிலிருக்கும் சிரியாவின் இறுதிப் பிரதான நகரமே இட்லிப் ஆகும்.

இந்நிலையிலேயே, தென் இட்லிப்பிலுள்ள கிராமங்களையும் நகரங்களையும் வட ஹமாவிலுள்ள லடம்னே, கபார் ஸெய்டா ஆகிய நகரங்களிலும் ஆகக்குறைந்தது டசின் கணக்கிலான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக சம்பவத்தை கண்ணுற்ற்வர்களும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

தெற்கு இட்லிப்பிலுள்ள கான் ஷெய்க்கூன் நகரத்தின் புறநகர்களிலுள்ள வீடுகளின் மீது வெடிபொருள் சாதனங்கள் அடங்கியுள்ள கொள்கலன்கள் அடங்கிய கொத்தணிக் குண்டுகளை சிரிய ஹெலிகொப்டர்கள் போட்டதாக அங்கிருக்கும் இருவர் தெரிவித்துள்ளனர்.

கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துவதை சிரிய இராணுவம் மறுக்கின்றபோதும் அவை இராணுவத்தால் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கான் ஷெய்க்கூனுக்கருகிலுள்ள அப்டீன் கிராமத்தில், ரஷ்ய விமானங்களால் குண்டுத் தாக்குத்ல் நடாத்தப்பட்ட கட்டடமொன்றின் சிதைவுகளிலிருந்து குழந்தையொன்றினது உட்பட நான்கு சடலங்களை தாம் மீட்டதாக வைட் ஹெல்மட்ஸ் என அறியப்படுகின்ற மேற்குலகத்தால் நிதியளிக்கப்படுகின்ற சிரிய சிவில் பாதுகாப்பு மீட்புச் சேவை தெரிவித்துள்ளது.

பொதுமக்களை தவிர்ப்பதாகவும் அல் கொய்தா குழுக்களை மாத்திரமே இலக்கு வைப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்ற நிலையில், கடந்த சில நாட்களாக இறந்தோர் பொதுமக்களே என எதிரணித் தகவல் மூலங்களும் அங்கிருப்பர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஹாஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவ்வைத்தியசாலை தனது சேவைகளை நிறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .