2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'கோழைத்தனமான தாக்குதல்' என்கிறார் ஒபாமா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் லூசியானாவிலுள்ள பட்டன் றூஸில், பொலிஸார் மீது இலங்கை நேரப்படி நேற்று முன்தினமிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், மூவர் கொல்லப்பட்டதோடு, மேலும் மூவர் காயமடைந்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல்களைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்தத் தாக்குதலுக்கு நீதி கிடைக்கச் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பட்டன் றூஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட அல்ட்டன் ஸ்டேர்லிங், மினிசோடாவில் பொலிஸாரால் கொல்லப்பட்ட பிலான்டோ கஸ்டிலோ ஆகியோரின் மரணங்களுக்கெதிராக, டலஸில் வைத்து 5 பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட பாணியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர், பொலிஸாரால் கொல்லப்பட்டிருந்தார்.

கறுப்பின இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையைக் கொண்ட ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்றினார்.

இந்தத் தாக்குதலைக் கோழைத்தனமானது என்றழைத்த அவர், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு அழைத்தார். நாட்டைப் பிளவுபடுத்தக்கூடியதன்றி, ஒற்றுமைப்படுத்தக்கூடிய வார்த்தைகளையும் செயற்பாடுகளையும் அனைவரும் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் கோரினார்.

"உணர்ச்சியைக் கிளறி விடுகின்ற பேச்சுகள் எமக்கு வேண்டாம். அரசியல் புள்ளிகளைப் பெறுவதற்காகவோ அல்லது நிகழ்ச்சிநிரலொன்றை முன்னகர்த்துவதற்காக, கவனமற்ற குற்றச்சாட்டுகள் எமக்கு வேண்டாம். எங்களுடைய சொற்களைக் கட்டுப்படுத்தி, மனங்களை நாம் திறக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

சட்டத்தை அமுல்படுத்துகின்ற அதிகாரிகளுக்கெதிரான வன்முறை, எப்போதும் நியாயப்படுத்தப்படாது என்பது தொடர்பாகத் தெளிவாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், "பொலிஸார் மீதான தாக்குதல், எம்மனைவர் மீதான தாக்குதலாகும்” எனத் தெரிவித்ததோடு, இவ்வாறான சம்பவங்கள், அடிக்கடி இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலை மேற்கொண்ட நபர், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீரரான கறுப்பினத்தைச் சேர்ந்த 29 வயதான கவின் லோங் என இனங்காணப்பட்டுள்ளார். அண்மைய தாக்குதல்களுக்கெதிராக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும், இத்தாக்குதல்களில் உயிரிழந்த பொலிஸாரில் ஒருவர், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .