2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தியாகியாக இறக்க விரும்பிய ப்ரஸல்ஸ் தாக்குதலாளி

Shanmugan Murugavel   / 2016 மே 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு நவம்பரில் பிரான்ஸின் பரிஸிலும் பின்னர் இவ்வாண்டு மார்ச்சில் பெல்ஜியத்தின் ப்ரஸல்ஸிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களோடு தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மொஹமட் அப்ரினி, தியாகியாக இறக்க விரும்பினார் என, அவரது கடிதமொன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பரிஸ் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபரான சாலா அப்டெல்ஸ்லாமுடன், அத்தாக்குதல்களுக்கு முன்னதாகக் காணப்பட்டார் எனக் கண்டுபிடிக்கப்பட்ட அப்ரினி, பின்னர், ப்ரஸல்ஸ் விமானத் தாக்குதல்களின்போது, தற்கொலைக் குண்டுதாரிகள் இருவரோடும் காணப்பட்ட தொப்பி அணிந்த நபராகப் பிரபலமடைந்திருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியிலிருந்தே, இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. ப்ரஸல்ஸ் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு ஒரு மாதம் முன்னதாக, அவரது அம்மாவுக்கு எழுதிய கடிதமே தற்போது வெளியாகியுள்ளதோடு, அவர் உயிருடன் உள்ள போதிலும் அக்கடிதமே, அவரது 'இறுதி வாக்குமூலம்" என, விசாரணையாளர்களால் கருதப்படுகிறது.

குறித்த கணினி, குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது அம்மாவுக்கு அவர் எழுதிய கடிதம், அழிக்கப்பட்ட ஆவணங்கள் காணப்பட்ட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில், சிரியாவுக்குச் சென்று, 2014ஆம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதலாளியாக மாறிய தனது இளைய சகோதரனின் மரணம், மதத்தை நோக்கித் தன்னை இழுத்ததாகத் தெரிவித்துள்ள அவர், அதன் காரணமாகவே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பரிஸ் தாக்குதலாளிகளை 'கதாநாயகர்கள்" என விளித்துள்ள அவர், தனது தாயின் மன்னிப்பைக் கோரியுள்ளதோடு, தனது சகோதரனுடன் இணைந்து, தனது தாயை, சொர்க்கத்தில் காண்பதாகத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .